பன்னுன் வழக்கு: அஜித் தோவல், சாமந்த் கோயலுக்கு அமெரிக்க நீதிமன்றம் சம்மன்
செய்தி முன்னோட்டம்
தடை செய்யப்பட்ட 'சீக்ஸ் ஃபார் ஜஸ்டிஸ்' (SFJ) அமைப்பின் தலைவரும், காலிஸ்தான் பயங்கரவாதியுமான குர்பத்வந்த் சிங் பன்னுன் தொடர்ந்த சிவில் வழக்கில், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் முன்னாள் RAW உளவுத்துறை தலைவர் சாமந்த் கோயல் ஆகியோருக்கு அமெரிக்க நீதிமன்ற உத்தரவின் பேரில் தூதரக வழிகள் மூலமாக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. வாஷிங்டனில் உள்ள இந்தியத் தூதரகம் வழியாக இந்த சம்மன்களை அமெரிக்க வெளியுறவுத்துறை சார்பாக வழங்கப்பட்டுள்ளது. தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதாக கூறி இழப்பீடு கேட்டு பன்னுன் இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளார்.
வழக்கின் பின்னணி
அமெரிக்க நீதித்துறையின் நடவடிக்கை
அமெரிக்கா மற்றும் கனடாவில் இருந்து கொண்டு இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், இந்திய தூதர்களுக்கு எதிராகவும் வன்முறையை தூண்டி வரும் பன்னுனை, மத்திய அரசு பயங்கரவாதியாக அறிவித்துள்ளது.
பன்னுனைக் கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியதாக நிகில் குப்தா என்பவர் மீது அமெரிக்க நீதித்துறை குற்றஞ்சாட்டியது.
செக் குடியரசில் கைது செய்யப்பட்டு அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்ட நிகில் குப்தா, முன்னாள் 'ரா' அதிகாரி விகாஷ் யாதவுடன் இணைந்து செயல்பட்டதாகக் கூறி தனது குற்றங்களை ஒப்புக்கொண்டார்.
அந்த வழக்கின் தொடர்ச்சியாகவே அஜித் தோவல் உள்ளிட்டோரை இணைத்து பன்னுன் இந்த சிவில் வழக்கைத் தொடுத்துள்ளார்.
மறுப்பு
இந்தியாவின் நிலைப்பாடு
அமெரிக்கா எழுப்பிய பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பாக உயர்மட்டக் குழுவை அமைத்து இந்தியா விசாரித்து வருவதுடன், விகாஷ் யாதவ் மீது இந்திய நீதிமன்றத்தில் வழக்கும் நிலுவையில் உள்ளது.
இருப்பினும், காலிஸ்தான் பிரிவினைவாதியான பன்னுன் தனிப்பட்ட முறையில் தொடர்ந்துள்ள இந்த சிவில் வழக்கை "தேவையற்றது மற்றும் எந்தவித அடிப்படை ஆதாரமும் இல்லாதது" எனக் கூறி இந்திய அரசு முற்றிலுமாக நிராகரித்துள்ளது.
பிரிவினைவாத அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் தூதரக நெறிமுறைகளைத் தாண்டி அமெரிக்க நீதிமன்றம் எடுத்துள்ள இந்த நடவடிக்கை மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.