LOADING...
தக்காளி விலை உயர்வு: தமிழகத்தில் ரூ.60க்கு விற்பனை
நாட்டு தக்காளி தற்போது கிலோ ரூ.60 வரை விற்பனை செய்யப்படுகிறது

தக்காளி விலை உயர்வு: தமிழகத்தில் ரூ.60க்கு விற்பனை

எழுதியவர் Venkatalakshmi V
Jul 25, 2025
08:48 am

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தில் தக்காளி விலை திடீரென உயர்ந்துள்ளது. சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில், நாட்டு தக்காளி தற்போது கிலோ ரூ.60 வரை விற்பனை செய்யப்படுகிறது. கடந்த வாரம் வரை ரூ.30க்கு விற்கப்பட்ட தக்காளி விலை, ஒரே வாரத்தில் இரட்டிப்பாகியுள்ளது. தக்காளி விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக, அண்டை மாநிலங்களான கர்நாடகா மற்றும் ஆந்திராவில் சாகுபடி பரப்பளவு குறைந்துள்ளது தான். கடந்த சில ஆண்டுகளில் அதிக உற்பத்தி காரணமாக கிடைத்த குறைந்த விலையால் நட்டம் சந்தித்த விவசாயிகள், இந்தாண்டு மாற்றுப் பயிர்களுக்கு மாறியுள்ளனர். இதனால், அறுவடையாகும் தக்காளியின் அளவு கணிசமாக குறைந்துள்ளது.

நடவடிக்கை

தமிழக அரசு பசுமை விற்பனை நிலையங்கள் மூலமாக தக்காளியை விற்க திட்டம்

கோயம்பேடு சந்தைக்கு தினசரி 70 முதல் 100 லாரிகள் வரையில் தக்காளி வரத்து இருந்த நிலையில், தற்போது அது 50 லாரிகளாகவே குறைந்துள்ளது என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக, தமிழ்நாட்டில் தக்காளி விலை தொடர்ந்து உயர்வடைந்து வருகிறது. விலை உயர்வை கட்டுப்படுத்தும் நோக்கில், தமிழக அரசு தக்காளி விலையை விலை கண்காணிப்பு பிரிவின் மூலம் ஒட்டுமொத்தமாக கண்காணித்து வருகிறது. கடந்த ஆண்டில் போல, கூட்டுறவு விற்பனை நிலையங்கள் மற்றும் பசுமை விற்பனை நிலையங்கள் மூலமாக தக்காளி குறைந்த விலையில் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. அதேபோல், தோட்டக்கலைத் துறை, தக்காளி சாகுபடியை ஊக்குவிக்க சிறப்பு திட்டங்களை வகுத்து வருகிறது. விவசாயிகளுக்கு பயிர் கடன்கள் வழங்கி, உற்பத்தியை அதிகரிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன.