Loading...
சல்மான் கானை தொடர்ந்து டைகர் ஷெராப்: லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைத் தொட முடியாதது ஏன்?
டைகர் ஷெராப் மீதான தாக்குதலுக்கு சிறையில் அடைக்கப்பட்டுள்ள கேங்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்றுள்ளது

சல்மான் கானை தொடர்ந்து டைகர் ஷெராப்: லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைத் தொட முடியாதது ஏன்?

எழுதியவர் Venkatalakshmi V
Oct 20, 2026
12:56 pm

செய்தி முன்னோட்டம்

மும்பை ஜூஹு பகுதியில் பிரபல பாலிவுட் நடிகர் டைகர் ஷெராப்பின் காரை இலக்கு வைத்து அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இத்தாக்குதலுக்கு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரபல கேங்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்றுள்ளது. ஏற்கனவே பாலிவுட் நடிகர் சல்மான் கானின் வீட்டின் முன் துப்பாக்கிச்சூடு, இயக்குநர் ரோஹித் ஷெட்டி வீட்டின் முன் தாக்குதல் மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் பாபா சித்திக் படுகொலை ஆகிய சம்பவங்களைத் தொடர்ந்து, தற்போது டைகர் ஷெராப் இலக்கு வைக்கப்பட்டுள்ளார்.

பிஷ்னோய் கும்பல்

அமெரிக்காவில் தலைமறைவாக இருக்கும் பிஷ்னோய் கும்பல்

அமெரிக்காவில் தலைமறைவாக இருக்கும் அனில் பண்டிட் என்பவன், சமூக வலைதளங்கள் வாயிலாக இத்தாக்குதலுக்கு பிஷ்னோய் கும்பல் சார்பில் பொறுப்பேற்றுள்ளான்.

FBI அறிக்கைகளின்படி, லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் மற்றும் மிரட்டல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

குற்றச் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்ற போதிலும், லாரன்ஸ் பிஷ்னோயை மாநிலக் காவல்துறையினரால் நேரில் காவலில் எடுத்து விசாரிக்க முடியாததற்கு மத்திய உள்துறை அமைச்சகத்தின் (MHA) சட்டப்பூர்வத் தடையே முக்கியக் காரணமாகும்.

தடை

பிஷ்னோயை ஏன் காவல்துறையினரால் காவலில் எடுத்து விசாரிக்க முடியவில்லை?

குஜராத்தின் சபர்மதி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள லாரன்ஸ் பிஷ்னோயை சட்டம் - ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக சிறையை விட்டு வெளியேற்ற மத்திய அரசு தடை விதித்துள்ளது.

இந்தத் தடை உத்தரவு அமலில் இருக்கும் வரை, பிற மாநிலக் காவல்துறையினர் பிஷ்னோயை தங்கள் காவலுக்கு மாற்ற முடியாது.

இருப்பினும், நீதிமன்ற அனுமதி பெற்றுச் சிறைக்குள்ளேயே சென்று விசாரணை நடத்த எந்தத் தடையும் இல்லை.

அமெரிக்காவில் இயங்கும் அனில் பண்டிட், ஹர்மன் சந்து மற்றும் கோல்டி ப்ரார் போன்ற வெளிநாட்டுத் தலைவர்கள் உள்ளூர் இளைஞர்களை பயன்படுத்தி இத்தகைய தாக்குதல்களை நடத்துவது காவல்துறைக்கு மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது.

ADVERTISEMENT