ஆசிய பாரா போட்டிகள் 2026: துப்பாக்கிச் சுடுதலில் மோனா அகர்வாலுக்குத் தங்கம், அவனி லேகராவுக்கு வெள்ளி
செய்தி முன்னோட்டம்
ஜப்பானின் ஐச்சி-நாகோயாவில் நடைபெற்று வரும் 2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் இந்திய வீராங்கனைகள் தங்களது பதக்க வேட்டையை மிக பிரம்மாண்டமாகத் தொடங்கியுள்ளனர். மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் ஸ்டாண்டிங் SH1 இறுதிப்போட்டியில் இந்தியாவின் மோனா அகர்வால் 250.0 புள்ளிகள் குவித்து தங்கப் பதக்கத்தையும், மற்றொரு இந்திய நட்சத்திர வீராங்கனையான அவனி லேகரா 249.6 புள்ளிகள் பெற்று வெள்ளிப் பதக்கத்தையும் கைப்பற்றி சர்வதேச அரங்கில் இந்தியக் கொடியைப் பறக்கவிட்டுள்ளனர். கடைசி வரை அனல் பறந்த இந்த விறுவிறுப்பான மோதலில் வெறும் 0.4 புள்ளிகள் வித்தியாசத்தில் மோனா முதலிடத்தைப் பிடித்த நிலையில், தென் கொரியாவின் லீ யுன்ரி 227.9 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கம் வென்றார்.
சாதனை
அவனி லேகராவின் சாதனையை முறியடித்த மோனா அகர்வால்
தங்கப் பதக்கம் வென்றது மட்டுமின்றி, 250.0 புள்ளிகள் குவித்ததன் மூலம் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளின் இறுதிப்போட்டி வரலாற்றில் புதிய சாதனையையும் மோனா அகர்வால் படைத்துள்ளார்.
இதற்கு முன்பு 2023 ஹாங்சோ போட்டியில் அவனி லேகரா 249.6 புள்ளிகள் எடுத்திருந்ததே சாதனையாக இருந்த நிலையில், அதனை மோனா தற்போது முறியடித்துள்ளார்.
முன்னதாக இன்று நடைபெற்ற தகுதிச் சுற்றிலும் மோனா அகர்வால் 629.1 புள்ளிகள் குவித்து புதிய ஆசியப் பாரா சாதனையுடன் முதலிடத்தைப் பிடித்திருந்தார்.
சீனாவின் ஜாங் குய்பிங் வசம் இருந்த முந்தைய தகுதிச் சுற்று சாதனையைத் தகர்த்தெறிந்த அவர், நூலிழையில் உலக சாதனையை (629.4 புள்ளிகள்) தவறவிட்டார்.
தகுதிச் சுற்றில் 626.4 புள்ளிகள் எடுத்து அவனி லேகரா இரண்டாவது இடத்தைப் பிடித்திருந்தார்.
ஏமாற்றம்
ஆண்கள் பிரிவில் கைநழுவிய பதக்க வாய்ப்பு
மகளிர் பிரிவில் இந்தியா தங்கம் மற்றும் வெள்ளி என இரண்டையும் வென்று ஆதிக்கம் செலுத்திய போதிலும், ஆண்கள் 10 மீட்டர் ஏர் ரைபிள் ஸ்டாண்டிங் எஸ்.ஹெச்.1 இறுதிப்போட்டியில் இந்திய வீரர்களுக்குப் பதக்க வாய்ப்பு கைநழுவியது.
இந்திய வீரர் மகாவீர் ஸ்வரூப் உன்ஹல்கர் 205.9 புள்ளிகளுடன் 4-வது இடத்தைப் பிடித்து நூலிழையில் பதக்கத்தை இழந்தார்.
இப்போட்டியில் அறிமுக வீரராகக் களமிறங்கிய ராகேஷ் நிடகுந்தி 141.5 புள்ளிகள் பெற்று 7-வது இடத்தைப் பிடித்தார்.
முன்னதாக நடந்த தகுதிச் சுற்றில் நிடகுந்தி மற்றும் உன்ஹல்கர் ஆகியோர் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றிருந்த நிலையில், மற்றொரு இந்திய வீரரான ஆனந்த கிருஷ்ணன் 13-வது இடத்தைப் பிடித்து வாய்ப்பை இழந்தது குறிப்பிடத்தக்கது.