அமெரிக்கா சம்மதித்தால் 6 நாளில் ஹார்முஸ் திறக்கப்படும்! ஈரானின் 7 அம்ச கோரிக்கை குறித்து அப்பாஸ் அராச்சி பேச்சு
செய்தி முன்னோட்டம்
அமெரிக்கா தனது நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டால், சர்வதேசக் கடல் வழியான ஹார்முஸ் ஜலசந்தியை 6 நாட்களுக்குள் மீண்டும் திறக்கத் தயார் என்று ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராச்சி அறிவித்துள்ளார். ஈராக் தலைநகர் பாக்தாத்தில் நடைபெறும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய அவர், 7 நாட்கள் கால அவகாசம் கொண்ட தங்களின் ஒப்பந்தப் திட்டம் இன்னும் செயல்பாட்டில் உள்ளதாகக் உறுதிப்படுத்தினார். அமெரிக்க நிர்வாகம் தங்களின் கோரிக்கைகளை ஏற்றால் ஏழாவது நாளில் அமைதிப் பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கும் எனக் கூறினார்.
கோரிக்கைகள்
ஈரானின் பிரதான 7 அம்சக் கோரிக்கைகள் விவரம்
ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்க ஈரான் விதித்துள்ள நிபந்தனைகளில், ஈரானியத் துறைமுகங்கள் மீதான அமெரிக்காவின் பொருளாதார முற்றுகையை விலக்கிக் கொள்வது பிரதான கோரிக்கையாக உள்ளது.
மேலும், ஈரானியக் கச்சா எண்ணெய் ஏற்றுமதி மீதான தடைகளை நீக்குவதுடன், மத்திய கிழக்கில் நடைபெறும் அனைத்துப் போர்களையும் உடனடியாக முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என ஈரான் வலியுறுத்தியுள்ளது.
இந்த கோரிக்கைகளுக்கு அமெரிக்கா அளித்த பதில்கள் திருப்திகரமாக இல்லை என்றும், வாஷிங்டன் நிர்வாகம் அமைதிப் பேச்சுவார்த்தையில் நேர்மையுடன் செயல்படவில்லை என்றும் அராச்சி சாடியுள்ளார்.
அமெரிக்காவின் நிபந்தனை
அமெரிக்காவின் அணுசக்தி நிபந்தனையும் டிரம்பின் பேச்சும்
அதேவேளையில், ஈரானின் அணுசக்தித் திட்டங்களை முடக்குவதே அமைதி ஒப்பந்தத்திற்கு முதன்மை நிபந்தனை என அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது.
ஈரான் தனது யுரேனியம் செறிவூட்டும் திறனை கணிசமாகக் குறைக்க வேண்டும் என அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் கென்டக்கி பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் உடனான போர் மிக விரைவில் முடிவுக்கு வரும் என்றும், இதனால் அமெரிக்காவில் எரிபொருள் விலைகள் பெருமளவில் குறையும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தாக்குதல் எச்சரிக்கை
ஈரானின் புதிய பாதுகாப்பு அமைச்சரின் தாக்குதல் எச்சரிக்கை
முன்னதாக, ஈரானின் புதிய பாதுகாப்பு அமைச்சராக பொறுப்பேற்றுள்ள மெஹர்தாத் அக்லாகி, அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்காவின் மிக வலிமையான "அனைத்துக் குண்டுகளின் தாய்" (MOAB) ரகக் குண்டுகளை எதிர்கொள்ள ஈரான் அனைத்து ராணுவ நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக அவர் உறுதிபடக் கூறினார்.
எட்டு மாதங்களாகத் தொடரும் இந்த போரில் அணு ஆயுத அச்சுறுத்தல்கள் நிலவி வரும் சூழலில், ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பது தொடர்பான ஈரானின் இத்தீர்மானம் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் சந்தையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.