Loading...
இந்தியா முழுவதும் 50 புதிய மருத்துவமனைகள்! டாடா அறக்கட்டளை தலைவர் நோயல் டாடா அறிவிப்பு
டாடா அறக்கட்டளை தலைவர் நோயல் டாடா

இந்தியா முழுவதும் 50 புதிய மருத்துவமனைகள்! டாடா அறக்கட்டளை தலைவர் நோயல் டாடா அறிவிப்பு

எழுதியவர் Sekar Chinnappan
Oct 17, 2026
08:22 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவில் அனைவருக்கும் தரமான மற்றும் மலிவான மருத்துவ சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், நாடு முழுவதும் 40 முதல் 50 இலாப நோக்கற்ற பொது மருத்துவமனைகளைத் தொடங்க டாடா அறக்கட்டளை திட்டமிட்டுள்ளது. அமைப்பின் 2025-26 ஆண்டறிக்கையில் டாடா அறக்கட்டளை தலைவர் நோயல் டாடா இப்புதிய விரிவாக்கத் திட்டத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். வசதியுள்ள நோயாளிகளிடம் பெறப்படும் கட்டணத்தைக் கொண்டு, ஏழை எளிய மக்களுக்கு விலையில்லா மருத்துவ சிகிச்சை அளிக்கும் சிறப்பு மாதிரி முறையில் இந்த மருத்துவமனைகள் செயல்படும்.

திட்டம்

25 லட்சம் மக்களை இலக்காகக் கொண்ட 5 ஆண்டுகால திட்டம்

மருத்துவமனை விரிவாக்கத்துடன் 2026-2031 காலக்கட்டத்திற்கான பிரத்யேக சுகாதார உத்தி திட்டத்தையும் டாடா அறக்கட்டளை வடிவமைத்துள்ளது.

இந்த திட்டம் சுமார் 75 வட்டாரங்களில் உள்ள 25 லட்சம் மக்களை சென்றடைவதையும், 100-க்கும் மேற்பட்ட பொது சுகாதார மையங்களை மேம்படுத்துவதையும் முதன்மை இலக்காகக் கொண்டுள்ளது.

மேலும் 10 லட்சம் முதியவர்களுக்கு ஆரம்ப சுகாதார சிகிச்சைகள் வழங்கப்படவுள்ளன.

கிராமப்புறங்களில் உள்ள 20,000-க்கும் மேற்பட்ட கள சுகாதாரப் பணியாளர்களுக்கு சிறப்புப் பயிற்சிகளும் அளிக்கப்படவுள்ளன.

சாதனை

2025-26 நிதியாண்டில் ₹1,556 கோடி நிதி வழங்கி சாதனை

கடந்த 2025-26 நிதியாண்டில் டாடா அறக்கட்டளை பல்வேறு சமூக நலப் பணிகளுக்காக மொத்தம் ₹1,556.31 கோடி நிதி விநியோகம் செய்துள்ளது.

இதில் அதிகபட்சமாக கிராமப்புற வாழ்வாதார மேம்பாட்டிற்கு ₹457.62 கோடியும், கல்வித்துறைக்கு ₹270.26 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

புற்றுநோய் சிகிச்சைக்காக ₹178.46 கோடி வழங்கப்பட்டுள்ளது.

தனிநபர் மருத்துவ உதவியாக ₹143.30 கோடியும், கல்வி உதவித்தொகையாக ₹59.38 கோடியும் பயனாளிகளுக்கு நேரடியாக வழங்கப்பட்டுள்ளதாக ஆண்டறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

சமூக மாற்றம்

நீடித்த சமூக மாற்றத்திற்கு முன்னுரிமை அளிக்க வலியுறுத்தல்

தர்மகாரியங்களுக்கு செலவிடப்படும் நிதியின் அளவை விட, அதனால் சமுதாயத்தில் ஏற்படும் நிலையான மாற்றமே முக்கியமானது என நோயல் டாடா வலியுறுத்தியுள்ளார்.

"நாம் செய்யும் பங்களிப்பு மக்களிடையே என்ன மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது, அது நீடித்து நிலைக்குமா என்பதை நாம் சிந்திக்க வேண்டும்." என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த திட்டங்களின் ஒரு பகுதியாகக் கடந்த ஆண்டில் மட்டும் டாடா அறக்கட்டளை மூலம் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட புற்றுநோய் நோயாளிகளுக்கு மருத்துவ ஆலோசனைகளும், 21 லட்சம் மாணவர்களுக்குக் கல்வி உதவிகளும் வழங்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT