Loading...
6 மாதக் குழந்தைகளின் உணவில் சர்க்கரைக்குத் தடை: உணவு பாதுகாப்பு ஆணையம் வரைவு விதி வெளியீடு
6 மாதக் குழந்தைகளின் உணவில் சர்க்கரைக்குத் தடை விதிக்க உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலை ஆணையம் முடிவு

6 மாதக் குழந்தைகளின் உணவில் சர்க்கரைக்குத் தடை: உணவு பாதுகாப்பு ஆணையம் வரைவு விதி வெளியீடு

எழுதியவர் Sekar Chinnappan
Oct 17, 2026
08:33 pm

செய்தி முன்னோட்டம்

இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலை ஆணையம் (FSSAI), 6 மாதங்கள் வரையிலான குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து உணவுகளில் சுக்ரோஸ் மற்றும் ஃப்ரக்டோஸ் போன்ற கூடுதல் சர்க்கரைகளை சேர்க்கத் தடை விதிக்கப் பரிந்துரைத்துள்ளது. இது தொடர்பான வரைவுத் திருத்த விதிகளை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. வளர்ச்சியின் ஆரம்பக் கட்டத்தில் குழந்தைகளுக்கு சர்க்கரை உணவுகள் வழங்கப்படுவதைக் கட்டுப்படுத்தவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சுமார் 1.16 பில்லியன் டாலர் மதிப்புள்ள இந்திய குழந்தைகள் உணவு சந்தையில் இம்மாற்றம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

பின்னணி

சுகாதார அமைச்சகத்தின் புதிய வரைவு விதிகளின் பின்னணி

முன்னதாக ஏப்ரல் 2024-இல் ஸ்விட்சர்லாந்து நிறுவனம் நடத்திய ஆய்வில், நெஸ்ட்லே நிறுவனம் ஐரோப்பாவில் சர்க்கரையற்ற நெஸ்லே செர்லாக்கை விற்றுவிட்டு இந்தியாவில் சர்க்கரை கலந்த உணவை விற்றது அம்பலமானது.

இச்சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அரசு இப் புதிய கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்துள்ளது.

புதிதாகக் கொண்டுவரப்பட்டுள்ள வரைவு உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் திருத்த விதிகள் 2026, கடந்த அக்டோபர் 16 அன்று அரசிதழில் வெளியிடப்பட்டது.

24 மாதங்கள் வரையிலான குழந்தைகளின் உணவு முறைகளை நெறிமுறைப்படுத்தவே இப்புதிய விதிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

உடல் பருமன்

குழந்தை பருவ உடல் பருமன் மற்றும் நோய் தடுப்பு

குழந்தையின் வாழ்க்கையில் முதல் 6 மாதங்கள் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமான காலகட்டமாகும் என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த காலகட்டத்தில் குழந்தைகளுக்குத் தேவையில்லாமல் சர்க்கரையை வழங்குவது, எதிர்காலத்தில் குழந்தைப் பருவ உடல் பருமன் மற்றும் பிற தொற்றா நோய்களுக்கு வழிவகுக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

எனவே தாய்ப்பால் கொடுப்பதை ஊக்குவிப்பதோடு, வணிக ரீதியிலான குழந்தை உணவுகளில் சர்க்கரையின் அளவைக் குறைக்க உற்பத்தியாளர்களை இத்திருத்தம் வலியுறுத்துகிறது.

இத்திட்டம் குழந்தைகளின் ஊட்டச்சத்து தேவையை சரியான முறையில் பூர்த்தி செய்ய உதவும்.

ADVERTISEMENT

கால அவகாசம்

60 நாட்கள் கால அவகாசமும் இறுதி உத்தரவும்

தற்போது வெளியிடப்பட்டுள்ள வரைவு விதிகள் குறித்து பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் தங்களின் கருத்துக்கள் மற்றும் ஆட்சேபனைகளைத் தெரிவிக்க 60 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இதன்பின் பெறப்படும் கோரிக்கைகளை ஆய்வு செய்த பிறகே FSSAI இறுதி விதிகளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும்.

தற்போதைய தரவுகளின்படி இந்தியக் குழந்தைகள் உணவு சந்தை வரும் 2030-ஆம் ஆண்டிற்குள் 1.98 பில்லியன் டாலராக உயரும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய சூழலில் அரசின் இந்த அதிரடி நடவடிக்கை குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு மிக முக்கியமான பாதுகாப்பாகக் கருதப்படுகிறது.

ADVERTISEMENT