Loading...
டிரம்பின் பேச்சை புறக்கணித்த ஜெலென்ஸ்கி! மாஸ்கோ மீது உக்ரைன் இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய ட்ரோன் தாக்குதல்
மாஸ்கோ மீது உக்ரைன் இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய ட்ரோன் தாக்குதல்

டிரம்பின் பேச்சை புறக்கணித்த ஜெலென்ஸ்கி! மாஸ்கோ மீது உக்ரைன் இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய ட்ரோன் தாக்குதல்

எழுதியவர் Sekar Chinnappan
Oct 18, 2026
07:49 pm

செய்தி முன்னோட்டம்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் எச்சரிக்கையையும் மீறி, ரஷ்யத் தலைநகர் மாஸ்கோ மீது உக்ரைன் தனது வரலாற்றிலேயே மிகப்பரிய அளவிலான ட்ரோன் தாக்குதலை சனிக்கிழமை (அக்டோபர் 17) இரவு நடத்தியுள்ளது. மாஸ்கோவைக் குறிவைத்து வந்த குறைந்தது 450 ட்ரோன்கள் சுட்டுவீழ்த்தப்பட்டதாக அந்நகர மேயர் செர்ஜி சோபியானின் உறுதிப்படுத்தியுள்ளார். இருப்பினும், சில ட்ரோன்கள் மாஸ்கோ எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மற்றும் குடியிருப்பு கட்டிடங்கள் மீது மோதி பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்த தாக்குதலில் 2 பேர் உயிரிழந்தனர் மற்றும் 6 பேர் படுகாயமடைந்தனர்.

எண்ணெய் முனையம்

செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் எண்ணெய் முனையம் மீது தாக்குதல்

மாஸ்கோ தவிர்த்து செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் உள்ள பிரதான எண்ணெய் சுத்திகரிப்பு முனையத்தையும் உக்ரைன் ட்ரோன்கள் தாக்கியுள்ளதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆண்டுக்கு 12.5 மில்லியன் டன்கள் எண்ணெயைக் கையாளும் திறன் கொண்ட இம்முனையத்தில் பிரம்மாண்ட தீ விபத்து ஏற்பட்டது.

மேலும் ஓசோன் விநியோக மையத்தின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதில் ஒருவர் உயிரிழந்தார்.

ரஷ்ய நாடாளுமன்றத் தேர்தலின் இறுதி நாளில் இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டதால், அந்நாட்டின் பாதுகாப்புத்துறை உச்சகட்ட எச்சரிக்கையில் வைக்கப்பட்டுள்ளது.

டிரம்ப் கோரிக்கை

டிரம்பின் கோரிக்கையும் அதிபர் ஜெலென்ஸ்கியின் உறுதியும்

எண்ணெய் மற்றும் டீசல் விலையைக் கட்டுப்படுத்தும் நோக்கில், ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய இரு நாடுகளும் பரஸ்பரம் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்த வேண்டும் என டிரம்ப் கோரியிருந்தார்.

உக்ரைனின் இத்தாக்குதல்களை டிரம்ப் அவமானம் எனக் கடுமையாக விமர்சித்திருந்தார்.

இருப்பினும், "புடின் அமைதிப் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இல்லை. அவர் வார்த்தை விளையாட்டுகளை மட்டுமே ஆடுகிறார்." என உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி பதிலடி கொடுத்துள்ளார்.

ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகளைத் தளர்த்தக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

ADVERTISEMENT

முக்கியத்துவம்

முக்கியத்துவம் வாய்ந்த போர் நகர்வுகளும் விளைவுகளும்

உலகளவில் கச்சா எண்ணெய் விலையைக் கட்டுப்படுத்த அமெரிக்கா முயற்சி செய்து வரும் வேளையில், உக்ரைன் நேரடியாக ரஷ்யாவின் பொருளாதார முதுகெலும்பான எண்ணெய் ஆலைகளைத் தகர்த்து வருகிறது.

இதன் மூலம் ரஷ்யாவின் நிதி ஆதாரங்களை முடக்குவதோடு, போரைத் தங்களுக்கு சாதகமாக மாற்ற உக்ரைன் திட்டமிட்டுள்ளது.

டிரம்பின் எச்சரிக்கையையும் மீறி உக்ரைன் இத்தகைய பிரம்மாண்ட தாக்குதலை நடத்தியிருப்பது, அமெரிக்கா மற்றும் உக்ரைன் இடையிலான உறவில் பெரும் விரிசலை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேச அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT