Loading...
அக்டோபர் 27 முதல் ரயில் டிக்கெட் காப்பீடு கட்டாயம்: பிரீமியம், காப்பீட்டுத் தொகை மற்றும் இழப்பீடு விவரங்கள்
அக்டோபர் 27 முதல் ரயில் டிக்கெட் காப்பீடு கட்டாயம்

அக்டோபர் 27 முதல் ரயில் டிக்கெட் காப்பீடு கட்டாயம்: பிரீமியம், காப்பீட்டுத் தொகை மற்றும் இழப்பீடு விவரங்கள்

எழுதியவர் Sekar Chinnappan
Oct 18, 2026
07:34 pm

செய்தி முன்னோட்டம்

வரும் அக்டோபர் 27, 2026 முதல் ரயில் நிலையக் கவுன்ட்டர்களில் வாங்கப்படும் அனைத்து ரயில் டிக்கெட்டுகளுக்கும் கட்டாய பயணக் காப்பீடு வழங்கப்பட வேண்டும் என இந்திய ரயில்வேக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2023 ஜூன் மாதத்தில் நிகழ்ந்த ஒடிசா கோர ரயில் விபத்தைத் தொடர்ந்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதிகள் அஹ்சானுதீன் அமானுல்லா மற்றும் ஆர் மகாதேவன் அடங்கிய அமர்வு அக்டோபர் 6 அன்று இந்த தீர்ப்பை வழங்கியது. இதுவரை ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே விருப்பத்தேர்வாக இருந்த இந்த சேவை, இனி கவுன்ட்டர் டிக்கெட்டுகளுக்கும் கட்டாயமாக்கப்படுகிறது.

பிரீமியம்

பிரீமியம் தொகை மற்றும் காப்பீட்டு சலுகைகள் விவரம்

தற்போது ஐஆர்சிடிசி ஆன்லைன் தளத்தில் டிக்கெட் பதிவு செய்யும்போது ஒரு பயணியிடமிருந்து வரிகளுடன் சேர்த்து 45 பைசா மட்டுமே காப்பீட்டு பிரீமியமாக வசூலிக்கப்படுகிறது.

இருப்பினும், நேரில் கவுன்ட்டர்களில் பெறப்படும் டிக்கெட்டுகளுக்கு எவ்வளவு பிரீமியம் வசூலிக்கப்படும் என்ற விவரத்தை ரயில்வே நிர்வாகம் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.

இந்த காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ரயில் விபத்தின் போது உயிரிழப்பு ஏற்பட்டாலோ அல்லது நிரந்தரக் முழு ஊனம் ஏற்பட்டாலோ ரூ. 10 லட்சம் வரை காப்பீட்டுத் தொகை வழங்கப்படும்.

மருத்துவ உதவி

பாதிக்கப்பட்டவர்களுக்கான மருத்துவ உதவி மற்றும் இழப்பீடு

பயணத்தின் போது பகுதி அளவு ஊனம் ஏற்படும் பட்சத்தில் ரூ.7.5 லட்சமும், காயங்களுக்கான மருத்துவமனை செலவுகளுக்கு ரூ. 2 லட்சமும் காப்பீட்டுத் தொகையாக வழங்கப்படும்.

மேலும் உயிரிழந்தவர்களின் உடல்களை எடுத்து செல்வதற்கான போக்குவரத்து செலவிற்கு ரூ. 10,000 வழங்கப்படும்.

5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இருக்கை ஒதுக்கி டிக்கெட் எடுக்கப்படாத நிலையில் இக்காப்பீடு பொருந்தாது.

ஆனால் 5 முதல் 11 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இருக்கை ஒதுக்கீட்டின் அடிப்படையில் இக்காப்பீட்டு சலுகை முழுமையாகப் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

வழிமுறை

விபத்து நேரிட்டால் காப்பீட்டுத் தொகை கோரும் முறை

ரயில் பயணத்தின் போது ஏதேனும் எதிர்பாராத விபத்துகள் நேரிட்டால், பாதிக்கப்பட்ட பயணியோ அல்லது அவர்களின் குடும்பத்தினரோ தங்களின் ரயில் டிக்கெட், பயண ஆவணங்கள் மற்றும் மருத்துவ சான்றிதழ்களைப் பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

கவுன்ட்டர் டிக்கெட்டுகளுக்கான காப்பீட்டு சான்றிதழ் வழங்கும் முறை மற்றும் நிறுவனங்களின் வழிகாட்டுதல்களை ரயில்வே விரைவில் வெளியிடும்.

இந்த காப்பீட்டுத் திட்டத்திற்கான அனைத்துப் பணப்பட்டுவாடாக்களும் காப்பீட்டு நிறுவனத்திற்கும் பாதிக்கப்பட்ட பயணியின் குடும்பத்திற்குமான ஒப்பந்த விதிகளின்படியே நேரடியாக நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT