வங்கக்கடலில் புயல் சின்னம் தீவிரமடைகிறது; சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும்?
செய்தி முன்னோட்டம்
மத்தியமேற்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேலும் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை காலை வடக்கு ஆந்திரா - தெற்கு ஒடிசா கடலோர பகுதிகளில் விசாகப்பட்டினம் மற்றும் கோபால்பூர் இடையே கரையை கடக்கக்கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, நேற்றைய தினம் தமிழகத்திலேயே அதிகமாக மதுரையில் 100.4 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி வெயில் சதமடித்தது குறிப்பிடத்தக்கது. சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மழை எச்சரிக்கை
தமிழகத்தில் மழை எச்சரிக்கை விவரங்கள்
இன்று, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 30-40 கி.மீ வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
நாளை, சென்னை மற்றும் வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பொதுவாக வறண்ட வானிலையே நிலவும்.
செப்டம்பர் 25 மற்றும் 26, வட தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை தொடர வாய்ப்புள்ளது.