தமிழ்நாடு வானிலை நிலவரம்: தென் மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை
செய்தி முன்னோட்டம்
மன்னார் வளைகுடா முதல் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் வரை நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பாதை காரணமாக, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இன்று பரவலாக மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் தாக்கத்தால் குறிப்பாகத் தென் மாவட்டங்கள் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பதிவாக வாய்ப்புள்ளது. வானிலை ஆய்வு மையத்தின் கணிப்புப்படி, இன்று திண்டுக்கல், மதுரை, விருதுநகர் மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். இதுதவிர, தேனி, தென்காசி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களின் மலைப்பகுதிகளிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மழை
சென்னை உட்பட 31 மாவட்டங்களில் மிதமான மழை
வட தமிழகத்தைப் பொறுத்தவரை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்யக்கூடும்.
அதேபோல், மேற்கு மற்றும் உள் மாவட்டங்களான நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களிலும் மிதமான மழை எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களிலும் இன்று மிதமான மழை தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து நாளை மழையின் தீவிரம் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.