தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடக்கம்: டெல்டா மாவட்டங்கள் உட்பட 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாட்டில் டெல்டா மாவட்டங்கள் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலையோர பகுதிகள் உட்பட 15-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்திய பகுதிகளில் இருந்து தென்மேற்கு பருவமழை முழுமையாக விலகும் சூழல் ஏற்பட்டுள்ள அதேவேளையில், தென்னிந்தியப் பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழல் உருவாகியுள்ளது. மத்திய கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சியும், குமரிக்கடல் பகுதிகளின் மேல் மற்றொரு வளிமண்டல சுழற்சியும் நிலவுகிறது. இதன் காரணமாக குமரிக்கடல் பகுதி முதல் ஒடிசா கடலோர பகுதிகள் வரை மன்னார் வளைகுடா மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வுப்பாதை நீடித்து வருகிறது.
எச்சரிக்கை
மிக கனமழை மற்றும் கனமழை எச்சரிக்கைக் குறிப்பு
இதன் தாக்கத்தால் நீலகிரி, கோயம்புத்தூர், தேனி மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும்.
மேலும், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், கடலூர், தென்காசி, கன்னியாகுமரி, கள்ளக்குறிச்சி, சேலம், திருச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பூர் மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஏனைய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
வானிலை நிலவரம்
அடுத்த 3 நாட்களுக்கான வானிலை நிலவரம்
அக்டோபர் 16: நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் கனமழை பெய்யும்.
அக்டோபர் 17 & 18: மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் பரவலாக கனமழை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.