இன்றும் தமிழகத்தில், 21 மாவட்டங்களுக்கு மிதமழை எச்சரிக்கை
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவிழந்ததை தொடர்ந்து, சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கான கனமழை எச்சரிக்கை திரும்ப பெறப்பட்டுள்ளது. எனினும், 21 மாவட்டங்களில் இன்றும் மிதமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக் கடலில் உருவான வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, காற்றழுத்த தாழ்வுப் பகுதி கடந்த 11ஆம் தேதி உருவானது. அதனைத் தொடர்ந்து, தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கனமழை பெய்தது. குறிப்பாக சென்னை உட்பட வடமாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் விடப்பட்டது. அந்த நிலையில், தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்துள்ளதால், சென்னைக்கு நிலுவையில் இருந்த கனமழை எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டுள்ளது.
Twitter Post
மிதமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்
வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவிழந்துள்ள நிலையில், வட மாவட்டங்கள் மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் வளிமண்டல சுழற்சி இன்னும் தொடர்கிறது. அதே நேரத்தில், தென்மேற்கு வங்கக் கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இந்த நிலவரத்தில், தமிழகத்தின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. குறிப்பாக, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, மதுரை, நெல்லை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று மிதமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதோடு, கேரள கடலோர பகுதிகளில், தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சி தொடர்ந்து நிலவுகிறது. நாளை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கன்னியாகுமரி உள்ளிட்ட 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கின்றது.