கனமழை எதிரொலி: 4 மாவட்ட பள்ளிகள் மற்றும் புதுச்சேரி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிரப் புயலாக வலுப்பெற்று ஆந்திர கடலோரப் பகுதியில் கரையைக் கடக்கவுள்ளதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தொடர் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. கனமழை காரணமாக கோவை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலும் தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூர், கோத்தகிரி மற்றும் குந்தா ஆகிய 4 தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பிராந்தியங்களில் உள்ள அனைத்துப் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மழை கணிப்பு
புயல் எச்சரிக்கை மற்றும் மாவட்ட வாரியான மழை கணிப்பு
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று தீவிரப் புயலாக மாறி ஆந்திராவின் பாபட்லா - விசாகப்பட்டினம் இடையே கரையைக் கடக்கவுள்ளது.
இதன் காரணமாக புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், மதுரை, நெல்லை, குமரி, தூத்துக்குடி, திருச்சி, தஞ்சை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.