2029 உலக பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் தொடரை நடத்தும் உரிமையை பெற்றது இந்தியா
செய்தி முன்னோட்டம்
சர்வதேச பளுதூக்குதல் சம்மேளனம் (IWF) நடத்தும் 2029-ஆம் ஆண்டிற்கான சீனியர் உலக பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் தொடரை நடத்தும் வரலாற்றுச் சிறப்புமிக்க உரிமையை இந்தியா பெற்றுள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரம் இத்தொடரை முதல்முறையாக ஏற்று நடத்தவுள்ளது. சீனாவின் நிங்போ நகரில் இன்று நடைபெற்ற சர்வதேச பளுதூக்குதல் சம்மேளனத்தின் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்தியா சீனியர் உலக பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் தொடரை நடத்துவது இதுவே முதல் முறையாகும்.
உலக சாம்பியன்ஷிப் போட்டிகள்
இதர நாடுகளுக்கான ஒதுக்கீடு விவரங்கள்
இக்கூட்டத்தில் 2029 மற்றும் 2030-ஆம் ஆண்டுகளுக்கான சீனியர் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளை நடத்தும் நகரங்கள் ஒரே நேரத்தில் உறுதி செய்யப்பட்டன.
அதன்படி, 2030-ஆம் ஆண்டு சீனியர் உலக சாம்பியன்ஷிப் போட்டியை நடத்தும் நகரமாக ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோ தேர்வு செய்யப்பட்டுள்ளது.
மேலும், 2028-ஆம் ஆண்டிற்கான உலக யூத் சாம்பியன்ஷிப் போட்டி கொசோவோ நாட்டின் பிரிஷ்டினா நகரிலும், உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டி வெனிசுலாவின் கராகஸ் நகரிலும் நடைபெறவுள்ளதாக சர்வதேச சம்மேளனம் அறிவித்துள்ளது.
வரவிருக்கும் ஆண்டுகளுக்கான சர்வதேசப் போட்டி அட்டவணையை முறைப்படுத்தும் நோக்கில் இந்த நான்கு உலக சாம்பியன்ஷிப் போட்டிகளும் ஒன்றாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
சர்வதேச அங்கீகாரம்
2036 ஒலிம்பிக் கனவு
இந்தியா உட்பட மூன்று நாடுகள் முதல்முறையாக உலகத் தொடரை நடத்தவுள்ளது விளையாட்டின் உலகளாவிய வளர்ச்சிக்குச் சான்றாக அமைந்துள்ளது என சர்வதேச பளுதூக்குதல் சம்மேளனப் பொதுச் செயலாளர் ஜோஸ் குவினோன்ஸ் பாராட்டியுள்ளார்.
ஏற்கனவே 2030 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்தவுள்ள அகமதாபாத் நகரம், 2036-ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் இந்தியாவின் பிரதான உத்தேச நகரமாகவும் முன்னிறுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், 2029 உலக சாம்பியன்ஷிப் தொடரை நடத்தும் வாய்ப்புக் கிடைத்திருப்பது இந்தியாவின் சர்வதேச விளையாட்டு அரங்கில் கூடுதல் பலத்தைக் கூட்டியுள்ளது.