Loading...
வணிகர்களுக்கு நிம்மதி; நவம்பர் 1 முதல் புதிய ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள்; சிபிஐசி அறிவிப்பு
நவம்பர் 1 முதல் புதிய ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் அமல்

வணிகர்களுக்கு நிம்மதி; நவம்பர் 1 முதல் புதிய ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள்; சிபிஐசி அறிவிப்பு

எழுதியவர் Sekar Chinnappan
Oct 24, 2026
07:51 pm

செய்தி முன்னோட்டம்

வணிகர்களின் வரி இணக்க சுமையைக் குறைக்கும் நோக்கில், புதிய ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் 2026 நவம்பர் 1 முதல் கட்டம் கட்டமாக செயல்படுத்தப்பட உள்ளன. அக்டோபர் 8 அன்று புதுடெல்லியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற 57-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இதற்கான முடிவுகள் எடுக்கப்பட்டன. சட்டத் திருத்தங்கள் தேவையில்லாத நடைமுறை மாற்றங்கள் அனைத்தும் வரும் நவம்பர் 1 முதல் உடனடியாக அமலுக்கு வரும் என மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் (சிபிஐசி) உறுப்பினர் சஞ்சய் மங்கள் தெரிவித்துள்ளார்.

தொழில்நுட்பக் கட்டுப்பாடு

தானியங்கி ரீஃபண்ட் மற்றும் போலி பில்கள் மீதான தொழில்நுட்பக் கட்டுப்பாடு

நவம்பர் 1 முதல் தகுதியான புதிய ரீஃபண்ட் கோரிக்கைகளுக்குத் தானியங்கி முறையில் ஒப்புதல் அளிக்கும் புதிய அமைப்பு தொடங்கப்படவுள்ளது.

அதேவேளையில் போலி பில்கள் மூலம் தவறான இன்புட் டேக்ஸ் கிரெடிட் கோருவதைத் தொடக்கத்திலேயே தடுக்க தொழில்நுட்ப அடிப்படையிலான சோதனைகள் தீவிரப்படுத்தப்படவுள்ளன.

சப்ளையர் செலுத்தியதாக அறிவித்த வரி உண்மையில் அரசுக்கு செலுத்தப்பட்ட பின்னரே, அதை வாங்குபவர் ஐடிசியாக பெற முடியும் வகையில் ரிட்டர்ன் தாக்கல் அமைப்பில் மாற்றங்கள் செய்யப்படுகின்றன.

சிறு வணிகர்கள்

சிறு வணிகர்களுக்கான சலுகைகள் மற்றும் தாமதக் கட்டண விலக்கு

ஆண்டுக்கு ரூ.5 கோடிக்குக் குறைவான விற்றுமுதல் கொண்ட பி2சி வணிகர்கள் பயன்பெறும் வகையில் புதிய ரிட்டர்ன் தாக்கல் முறைக்கு கொள்கை அளவில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் அவர்கள் ஆண்டுக்கு ஒருமுறை ரிட்டர்ன் தாக்கல் செய்து, காலாண்டுக்கு ஒருமுறை வரி செலுத்தினால் போதுமானது.

மேலும், ரூ.5 கோடி வரை விற்றுமுதல் கொண்ட சிறு வணிகர்கள் குறிப்பிட்ட மாதத்திற்குள் தாமதமாக ரிட்டர்ன் தாக்கல் செய்தாலும், அவர்களுக்குத் தாமதக் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்க ஜிஎஸ்டி கவுன்சில் முடிவெடுத்துள்ளது.

ADVERTISEMENT

விதிவிலக்கு

2027 ஏப்ரல் 1 முதல் அமலாகும் சட்டத் திருத்தங்கள் மற்றும் கைது விதிவிலக்கு

ஜிஎஸ்டி சட்டங்களில் சட்டபூர்வத் திருத்தங்கள் தேவைப்படும் மாற்றங்கள் அனைத்தும் 2027 ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதில் கைது நடவடிக்கைகளுக்கான பிரிவுகளை முழுமையாக நீக்குதல், வழக்குத் தொடர்வதற்கான வரம்பை ரூ.1 கோடியிலிருந்து ரூ.5 கோடியாக உயர்த்துதல் மற்றும் ரூ.10,000-க்கு குறைவான காரணங்களுக்கு நோட்டீஸ் அனுப்பத் தடை விதித்தல் ஆகியவை அடங்கும்.

இந்த கூட்டத்தில் வரி விகிதங்களில் மாற்றங்கள் ஏதும் செய்யப்படவில்லை என்றும் நடைமுறை எளிமையாக்கத்திற்கே முன்னுரிமை அளிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT