Loading...
ஜி20 உச்சி மாநாடு: அமெரிக்காவில் டொனால்ட் டிரம்பை சந்திக்கிறார் பிரதமர் மோடி?
இந்திய பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா செல்ல வாய்ப்புள்ளதாக தூதரக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

ஜி20 உச்சி மாநாடு: அமெரிக்காவில் டொனால்ட் டிரம்பை சந்திக்கிறார் பிரதமர் மோடி?

எழுதியவர் Venkatalakshmi V
Sep 23, 2026
07:52 am

செய்தி முன்னோட்டம்

வரும் டிசம்பர் மாதம் அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் நடைபெறவுள்ள ஜி20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா செல்ல வாய்ப்புள்ளதாக தூதரக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. டிசம்பர் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் புளோரிடாவில் உள்ள 'டிரம்ப் நேஷனல் டோனல் மியாமி' ரிசார்ட்டில் ஜி20 தலைவர்கள் உச்சி மாநாட்டை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நடத்தவுள்ளார். இம்மாநாட்டின் இடையே பிரதமர் மோடி, அதிபர் டிரம்பை நேரில் சந்தித்து இருதரப்புப் பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் செர்ஜியோ கோர் அளித்த பேட்டியில், ஜி20 மாநாட்டின் போது அதிபர் டிரம்ப் சந்திக்க திட்டமிட்டுள்ள முக்கிய உலகத் தலைவர்களில் பிரதமர் மோடியும் ஒருவர் எனக் குறிப்பிட்டுள்ளார்.

வரி அச்சுறுத்தல்

வர்த்தக மோதலும் வரி அச்சுறுத்தலும்

ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்திய பொருட்களுக்கு 100 சதவீதம் வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அச்சுறுத்தல் விடுத்து வரும் சூழலில், இச்சந்திப்பு பெரும் முக்கியத்துவம் பெறுகிறது.

தற்போது இரு நாடுகளுக்கும் இடையே சுமார் 240 பில்லியன் அமெரிக்க டாலராக இருக்கும் வர்த்தக உறவை, வரும் ஆண்டுகளில் 500 பில்லியன் டாலராக உயர்த்த இரு நாடுகளும் இலக்கு வைத்துள்ளன.

கடந்த ஜூன் மாதம் பிரான்ஸில் நடைபெற்ற ஜி7 மாநாட்டின் போது இரு தலைவர்களும் கடைசியாகச் சந்தித்துப் பேசினர் என்பது குறிப்பிடத்தக்கது.

கனடா

குவாட் மற்றும் கனடா பயணம்

ஜி20 மாநாட்டின் போது இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் அடங்கிய 'குவாட்' கூட்டமைப்பின் தலைவர்கள் சந்திப்பும் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

அமெரிக்கப் பயணத்தைத் தொடர்ந்து பிரதமர் மோடி கனடாவிற்குப் பயணம் மேற்கொள்ளக் கூடும் எனக் கூறப்படுகிறது.

கனடா பிரதமர் மார்க் கார்னியை சந்தித்து, இரு நாடுகளுக்கு இடையேயான விரிவான பொருளாதாரக் கூட்டு ஒப்பந்தம் (CEPA) குறித்தும் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்புள்ளது.

இப்பயணம் குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை.

ADVERTISEMENT