காசா போரை விரைவில் முடிவுக்கு கொண்டு வர நெதன்யாகுவிடம் மோடி வலியுறுத்தல்
காசா மீதான இஸ்ரேல் போரை விரைவில் முடிவுக்கு கொண்டு வரவும், நிவாரண உதவிகளை அதிகரிக்கவும், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான தொலைபேசி உரையாடலில் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். நேற்று பிரதமர் மோடியை அழைத்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, போர் குறித்த சமீபத்திய சூழ்நிலைகளையும், செங்கடலில் ஹூதி போராளிகளால் வர்த்தக கப்பல்கள் தாக்கப்படுவது குறித்து ஆலோசித்ததாக, மத்திய அரசின் அறிக்கை தெரிவித்துள்ளது. பிரதமர் மோடி, "பாதிக்கப்பட்ட மக்களுக்கான மனிதாபிமான உதவியின் அவசியத்தை மீண்டும் வலியுறுத்தியதோடு, மோதலுக்கு விரைவான மற்றும் அமைதியான தீர்வை வலியுறுத்தியதாகவும்" அந்த அறிக்கை கூறுகிறது.
வர்த்தக கப்பல்கள் தாக்கப்படுவது குறித்து கவலை தெரிவித்த பிரதமர்கள்
மேலும் அந்த அறிக்கையில், இந்த முயற்சிகள் மற்றும் அனைத்து பணய கைதிகள் விடுதலை ஆகியவை பேச்சுவார்த்தையின் மூலமே நடைபெற வேண்டுமென பிரதமர் மோடி தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது. வர்த்தக கப்பல்கள் தாக்கப்படுவது குறித்த கவலைகளை வெளிப்படுத்திய இரு நாட்டு பிரதமர்கள், இந்த விவகாரத்தில் தொடர்ந்து இணைந்திருக்க முடிவு செய்துள்ளனர். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, "இஸ்ரேல்-ஹமாஸ் மோதல், கடல் போக்குவரத்தின் பாதுகாப்பு குறித்த பகிரப்பட்ட கவலைகள் உட்பட பல விவகாரங்களை ஆலோசித்ததாக" தெரிவித்திருந்தார். பிரதமர் மோடியுடனான உரையாடல் குறித்து, இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் வெளியிட்டிருந்த அறிக்கையில், "கடல் போக்குவரத்தின் சுதந்திரம் என்பது உறுதி செய்யப்பட வேண்டிய ஒரு அத்தியாவசிய உலகளாவிய தேவை" என பிரதமர் மோடி கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் பிரதமருடன் பேசியது குறித்து, இந்திய பிரதமர் ட்விட்
செங்கடலில் இந்திய போர்க்கப்பல்கள்
கடந்த அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் அமைப்பின் திடீர் ஏவுகணை தாக்குதலுக்கு பின், இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையே போர் மோட்டார். போரில் ஹமாசுக்கு ஆதரவாக, ஈரான் ஆதரவு பெற்ற ஹூதி போராளி குழுக்கள், செங்கடலில் செல்லும் வர்த்தக கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்தியாவின் கடல்வழி வர்த்தகத்தின் கணிசமான பகுதி, இவ்வழியாக செல்வதால், இந்நாட்டிற்கும் இது கவலைகளை ஏற்படுத்தி உள்ளது. ஹோன் ஆப் ஆப்பிரிக்கா மற்றும் ஏடன் வளைகுடா இடையே அமைந்துள்ள, பாப் எல்-மண்டேப்பில் பெரும்பாலான வணிகக் கப்பல்கள் ஹூதிகளால் குறிவைக்கப்பட்டன. தற்போது அப்பகுதியில், இந்தியா இரண்டு போர்க்கப்பல்களை நிலை நிறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
19,000-ஐ கடந்த பாலஸ்தீனர்களின் உயிரிழப்பு
போர் தொடங்கிய போது இஸ்ரேலுடன் துணை நிற்பதாக அறிவித்த இந்தியா, பின்னர் இஸ்ரேலின் குண்டு வீச்சால் பலியாகும் அப்பாவி மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியதால், நடுநிலையான நிலையை எடுத்தது. அண்மையில் ஐநா பொதுச் சபையில் நடந்த காசா போர் நிறுத்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில், முதல் முறையாக இந்தியா போர் நிறுத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்தது குறிப்பிடத்தக்கது. இரண்டு மாதங்களை கடந்து நடந்து வரும் போரில், தற்போது வரை 19,000 பாலஸ்தீனர்களும், 1,200 இஸ்ரேலிகளும் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், சுமார் ஒரு மில்லியன் பாலஸ்தீனர்கள் வீடுகளை இழந்து அகதிகளாகியுள்ளனர்.