Explainer- ஹிந்தி மொழி பேசும் மாநிலங்களில், பாஜக ஏன் புது முகங்களை தேர்ந்தெடுத்தது?
ராஜஸ்தானில் முதல் முறை எம்எல்ஏவான பஜன்லால் சர்மாவை முதலமைச்சராகவும், சத்தீஸ்கர் மற்றும் மத்திய பிரதேசத்தின் முதல்வர்களாக விஷ்ணு தியோ சாய் மற்றும் மோகன் யாதவ் ஆகியோரை பாஜக அறிவித்தது பலருக்கு ஆச்சிரியத்தை ஏற்படுத்தியது. ராஜஸ்தானில் வசுந்தரா ராஜே, மத்திய பிரதேசத்தில் சிவராஜ் சிங் சவுகான் என மூத்த அனுபவசாலிகள் இருந்தும், பாஜக புது முகங்களை தேர்ந்தெடுத்துள்ளது. இந்த மூன்று மாநிலங்களிலும் புது முகங்களை முதல்வர்களாக தேர்ந்தெடுத்திருப்பதற்கு பின்னால், அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கான வியூகமும், சாதிய அரசியலை சமநிலைப்படுத்தும் பாஜகவின் திட்டமும் அடங்கியுள்ளதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.
சத்தீஸ்கர்
மாநிலத்தின் பழங்குடி பகுதிகளான சர்குஜா மற்றும் பஸ்தாரில் உள்ள 26 தொகுதிகளில், 22ல் வெற்றி பெற்றதற்கு பின்னர், பழங்குடியினரான சாய்யை முதல்வராக நியமித்ததில் ஆச்சரியம் இல்லை. இருப்பினும் இவரது நியமனம், பழங்குடியின வாக்காளர்களை அங்கீகரிப்பதை விட, 2024 தேர்தலுக்கான எல்லை தாண்டிய பிரச்சார மேடையை தயார்படுத்துவதாக பார்க்கப்படுகிறது. சத்தீஸ்கர் மாநிலத்தை சுற்றியுள்ள மத்திய பிரதேசம், ஜார்கண்ட் மற்றும் ஒரிசா மாநிலங்களில், முறையே 22%,26%, 23% பழங்குடிகள் உள்ளனர். சத்தீஸ்கரில் சாய்யை முதலமைச்சராகத் தேர்ந்தெடுத்திருப்பது, 2024 தேர்தலுக்கு முன், இந்த மாநிலங்களில் பழங்குடியினருக்கு உகந்த முகமாக பாஜக தன்னைக் காட்டிக்கொள்ள அனுமதிக்கிறது. இந்த 4 மாநிலங்களிலும், 75 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன, அதில் 20 தொகுதிகள் பழங்குடிகளுக்கான தனித்தொகுதிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய பிரதேசம்
மத்திய பிரதேசத்திலும் பாஜக பழங்குடியினர் ஓட்டுக்களை கைப்பற்ற காய்களை நகர்த்தி வந்தது. அது தேர்தலிலும் பலனளித்த நிலையில், 47 தனித்தொகுதிகளில் 24 தொகுதிகளை பாஜக கைப்பற்றியது. இதற்கு கைமாறாக பழங்குடியினரான ஜகதீஷ் தேவ்தா துணை முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். மேலும் கடந்த 2003ம் ஆண்டு முதல் பாஜகவிற்கு ஆதரவளித்து வரும் பிராமண சமுதாயத்திற்கும், துணை முதலமைச்சர் பதவியை பாஜக வழங்கியுள்ளது. மோகன் யாதவை முதலமைச்சராக தேர்ந்தெடுப்பதன் மூலம், அண்டை மாநிலங்களான பீகார் மற்றும் உத்தர பிரதேசத்தில் உள்ள 120 நாடாளுமன்ற தொகுதிகளை பாஜக குறிவைத்துள்ளது.
மோகன் யாதவ் மூலம் 149 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு குறி வைக்கும் பாஜக
பாஜக இவற்றில் வெல்லும் பட்சத்தில், பிரதமர் மோடி மூன்றாவது முறையாக ஆட்சி அமைப்பதை தடுக்க முடியாது. மத்திய பிரதேசத்தில் யாதவர்கள் மொத்த மக்கள் தொகையில் 6% மட்டுமே உள்ளனர். இருப்பினும், அவர்கள் பீகாரில் (14 சதவீதத்திற்கு மேல்) பெரிய ஓபிசி குழுவாக உள்ளனர் மற்றும் உத்திரபிரதேசத்தில் மொத்த மக்கள் தொகையில் 10% உள்ள யாதவர்களை குறிவைத்தே, பாஜக யாதவரை மத்திய பிரதேசத்தில் முதல்வர் ஆக்கியுள்ளது. இம்மூன்று மாநிலங்களும், 149 நாடாளுமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இது உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியின் அகிலேஷ் யாதவ் மற்றும் பீகாரில் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தேஜஸ்வி யாதவ் ஆகியோரை சமாளிக்க உதவும்.
ராஜஸ்தான்
ராஜஸ்தான் மாநிலத்தில் முதல் முறை எம்எல்ஏவான ஷர்மாவை, முதல்வராக பாஜக தேர்ந்தெடுப்பது, அவரின் ஆர்எஸ்எஸ் அமைப்புடனான தொடர்புக்காக எனக் கூறப்படுகிறது. மாநிலத்தில் இரண்டு முறை முதலமைச்சராக இருந்த வசுந்தரா ராஜே, பாஜகவிற்கு முதல் தேர்வாக இருந்திருக்கும். ஆனால், ஆட்சிக்கு எதிரான அதிருப்திக்கு பெயர் போன ராஜஸ்தான் மாநிலம், எதிர்கால தேர்தலில் தங்களுக்கு கைகொடுக்காமல் போகலாம் என்பதை பாஜக சிந்தித்துள்ளது. மேலும், பிராமண சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரை முதல்வர் ஆக்குவதன் மூலம், ராஜஸ்தான் உடன் எல்லையை பகிர்ந்து கொண்ட உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள 10% பிராமணர்கள் வாக்கை அறுவடை செய்ய பாஜக திட்டமிடுகிறது. அண்டை மாநிலங்களாக மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரில் உள்ள, 5% பிராமணர்கள் வாக்குகளையும் கைப்பற்ற பாஜகவிற்கு இது உதவலாம்.