
மழைக்காலக் கூட்டத் தொடர் இன்று தொடக்கம்: ஆபரேஷன் சிந்தூர், டிரம்ப் கருத்து உள்ளிட்டவை விவாதத்திற்கு வருகிறது
செய்தி முன்னோட்டம்
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று திங்கட்கிழமை தொடங்குகிறது. இந்த அமர்வில், பஹல்காமில் தாக்குதலுக்குப் பதிலளிக்கும் வகையில் இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் குறித்து விவாதிக்க தயாராக உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. முன்னதாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தின் போது, அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியா-பாகிஸ்தான் இடையிலான போர் நிறுத்தத்தில் தன்னுடைய பங்கு இருப்பதாக தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்க கூடும் என தெரிவித்ததாகவும் செய்திகள் தெரிவித்தன. மத்திய நாடாளுமன்ற விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு, "ஆபரேஷன் சிந்தூர் மற்றும் பஹல்காம் தாக்குதல் உள்ளிட்ட எந்தவொரு முக்கிய பிரச்சினைகளையும் விவாதிக்க அரசு தயாராக உள்ளது. நாடு சார்ந்த முக்கிய விவகாரங்களில் அரசு ஒருபோதும் விவாதத்திலிருந்து ஒதுங்காது" எனத் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகள்
விவாதத்திற்கு அழைப்பு விடுத்த எதிர்க்கட்சிகள்
அனைத்துக் கட்சி கூட்டத்தில் காங்கிரஸ், இடதுசாரிகள், சமாஜ்வாடி கட்சி, சிவசேனா (UBT), NCP(SP) உள்ளிட்ட பல கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். மக்களவையில் காங்கிரஸ் துணைத்தலைவர் கௌரவ் கோகோய், "ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதம் அவசியம்" என வலியுறுத்தினார். அதேபோல், பீகாரில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கையிலும் எதிர்க்கட்சிகள் கவனம் செலுத்துவதாகவும் அவர் கூறினார். பஹல்காம் தாக்குதலுக்குப் பின்னால் உள்ள உளவுத்துறை தோல்விகள், அமெரிக்க அதிபரின் விளக்கங்கள் ஆகியவை குறித்து பிரதமர் நேரடியாக விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
முக்கிய அம்சங்கள்
நாடாளுமன்ற கூட்டத்தொடரில் எதிர்பார்க்கப்படும் முக்கிய அம்சங்கள்
பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆபரேஷன் சிந்தூர் குறித்து விரிவான அறிக்கையை வழங்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. பீகாரில் நடைபெறும் வாக்காளர் பட்டியலின் தீவிர திருத்த நடவடிக்கைகள் (SIR) குறித்து எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனம் வெளியிட்டுள்ளன. தேசியவாத காங்கிரஸ் (SP) தலைவர் சுப்ரியா சுலே, மகாராஷ்டிராவில் இந்தி திணிப்பு குறித்து எழுப்பியுள்ளன. 17 புதிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், விவாதங்களுக்கு தடையில்லா செயல்பாடு தேவை என அரசு விரும்புகிறது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் ஆகஸ்ட் 21 வரை நடைபெறும்.