பிரதமர் மோடியின் 11வது சுதந்திர தின உரை; ஒரே நாடு ஒரே தேர்தல் முதல் ஒலிம்பிக் வரை; முக்கிய அம்சங்கள்
நாட்டின் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி வியாழன் (ஆகஸ்ட் 15) அன்று, சுதந்திர தினத்தன்று செங்கோட்டையில் கொடியேற்றினார். தொடர்ந்து 11 வது முறையாக கொடியேற்றியதன் மூலம், அதிக முறை கொடியேற்றியவர்களில் மன்மோகன் சிங்கின் சாதனையை முறியடித்து, தற்போது நேரு மற்றும் இந்திராவுக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தில் உள்ளார். இந்த முறை மோடி 98 நிமிடங்கள் உரையாற்றினார். இது அவரது மிக நீண்ட சுதந்திர தின உரை மட்டுமல்லாது, இந்திய பிரதமர்களில் வேறு எவரது உரையையும் விட மிக நீளமானது. இதற்கிடையே, இந்தியாவின் 78வது சுதந்திர தின விழாவில் பேசிய மோடி, தற்போதைய வங்கதேச அரசியல் நெருக்கடி உட்பட பல உள்நாட்டு மற்றும் சர்வதேச பிரச்சனைகளை தொட்டு பேசினார்.
பங்களாதேஷில் சிறுபான்மையினரின் பாதுகாப்பு குறித்து கவலை
பங்களாதேஷில் உள்ள இந்துக்கள் மற்றும் பிற சிறுபான்மையினரின் பாதுகாப்பு குறித்து தனது உரையில் கவலை தெரிவித்த பிரதமர் மோடி, அந்நாட்டின் நிலைமை விரைவில் மேம்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார். பங்களாதேஷின் வளர்ச்சிக்கு இந்தியா எப்போதும் உறுதுணையாக இருக்கும் என்று கூறிய மோடி, "ஒரு அண்டை நாடாக, வங்கதேசத்தில் என்ன நடந்தாலும் அது குறித்த கவலையை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. விரைவில் அங்கு நிலைமை இயல்பு நிலைக்கு வரும் என்று நம்புகிறேன். அங்குள்ள இந்துக்கள் மற்றும் சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பது 140 கோடி நாட்டு மக்களின் கவலையாகும். இந்தியா எப்போதும் நமது அண்டை நாடுகள் செழிப்பு மற்றும் அமைதியின் பாதையில் நடக்க விரும்புகிறது. நாங்கள் அமைதிக்கு உறுதிபூண்டுள்ளோம்." என்றார்.
பொது சிவில் சட்டம் காலத்தின் தேவை எனக் கூறிய பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி நாட்டில் ஒரே மாதிரியான சிவில் சட்டம் குறித்து தனது உரையில் பேசினார். தற்போதுள்ள வகுப்புவாத சட்டத்திற்கு பதிலாக மதச்சார்பற்ற சிவில் சட்டம் காலத்தின் தேவை என்று வலியுறுத்தினார். மேலும், ஒரே நாடு ஒரே தேர்தல் வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார். இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் நாட்டின் ஏதேனும் ஒரு பகுதியில் தேர்தல் நடப்பதால் வளர்ச்சி வேகம் பாதிப்பதாக கூறிய அவர், இதற்காக ஒரே நாடு ஒரே தேர்தல் வேண்டும் எனக் கூறினார். பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கு வழங்கப்படும் தண்டனைகள் கடினமானதாக இருக்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தினார். மேலும், தனது அரசு பெண்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் தொழில்முனைவில் சிறப்பு கவனம் கொடுப்பதையும் கோடிட்டுக் காட்டினார்.
விவசாயத் துறையில் சீர்திருத்தம் செய்யவேண்டியதன் அவசியம்
78வது சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது விவசாயத் துறையில் பெரிய சீர்திருத்தங்களுக்கு அழுத்தம் கொடுத்த மோடி, நாட்டில் விவசாயிகளின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை வலியுறுத்தினார். இயற்கை விவசாயத்தைத் தேர்ந்தெடுத்ததற்காக விவசாயிகளைப் பாராட்டிய பிரதமர், விக்சித் பாரத் என்ற இலக்கை நோக்கிச் செல்லும் போது, நாட்டின் விவசாயிகள் இந்தியாவை உலகின் இயற்கை உணவுக் கூடையாக மாற்ற முடியும் என்றும் கூறினார். இன்றும் நடுத்தர வகுப்பைச் சேர்ந்த குழந்தைகள் மருத்துவக் கல்விக்காக வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர் என்று கவலை தெரிவித்த மோடி, 5 ஆண்டுகளில் மேலும் 75,000 மருத்துவ இடங்கள் உருவாக்கப்படும் என்றார்.
2036இல் ஒலிம்பிக் போட்டியை நடத்த திட்டம்
பெரிய அளவிலான உலகளாவிய விளையாட்டு நிகழ்வுகளை நடத்தும் திறன் இந்தியாவுக்கு உள்ளது என்று கூறிய மோடி, 2036ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்த அனைத்து முயற்சிகளையும் செய்து வருவதாகக் கூறினார். சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (ஐஓசி) அதன் தேர்தலை நடத்திய பிறகு அடுத்த ஆண்டுதான் 2036 ஒலிம்பிக் போட்டியை நடத்தும் நாட்டை முடிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பல உலகளாவிய நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய விரும்புவதாகவும், அவர்களை ஈர்க்க மாநில அரசுகள் தங்களுக்குள் போட்டியிட வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக் கொண்டார். மூன்றாவது முறையாக தான் சந்தித்த பெரும்பாலான தொழிலதிபர்கள் இந்தியாவில் முதலீடு செய்ய விரும்புவதாக மோடி கூறினார்.
எதிர்க்கட்சிகள் மீது விமர்சனத்தை முன்வைத்த பிரதமர் மோடி
தனது உரையில் எதிர்க்கட்சிகளை மறைமுகமாகத் தாக்கி பேசிய பிரதமர் மோடி, நாடு ஒருங்கிணைக்கப்பட்ட தீர்மானத்துடன் முன்னோக்கிச் செல்லும் போது, சிலரால் முன்னேற்றத்தை சகித்துக் கொள்ள முடியவில்லை என்றார். ஊழலுக்கு ஆதரவளிக்கும் கலாச்சாரம் மற்றும் கரையான் கலாசாரத்தை சாடிய நரேந்திர மோடி, சிலர் அதை மகிமைப்படுத்துகிறார்கள் என்றாலும், அவர்களுக்கு எதிராக தான் விடாமுயற்சியுடன் செயல்படுவேன் என்றும் கூறினார். ஊழல் மற்றும் அதன் மகிமைப்படுத்துதல் குறித்து கவலை தெரிவித்த மோடி, இது சமூகத்தின் முக்கிய பிரச்சினை என்று விவரித்தார். "இந்தப் போருக்கு நான் விலை கொடுக்க வேண்டும் என்று எனக்குத் தெரியும், எனது கௌரவம் ஆபத்தில் இருக்கலாம், ஆனால் தனிப்பட்ட கௌரவத்தை விட தேசிய நலன்கள் முக்கியம்." என்று அவர் கூறினார்.