போலி புத்தகங்கள் ஊழல்: எழுத்தாளர்கள், கல்வியாளர்கள் கொண்ட குழு உருவாக்கப்படும் என அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
கோவை பெரியார் அறிவுலகம் நூலகத்திற்கு புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் நடைபெற்றதாக கூறப்படும் முறைகேடு விவகாரம் புயலைக் கிளப்பியுள்ள நிலையில், பொது நூலகங்களுக்கு புத்தகங்களை தேர்வு செய்ய எழுத்தாளர்கள் மற்றும் கல்வியாளர்கள் அடங்கிய புதிய குழு உருவாக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவித்துள்ளார். இதனிடையே, கோவை பெரியார் அறிவுலகத்தின் 4-ஆவது தளத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் இன்று சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
பேட்டி
"கள்ளப் புத்தகங்களை AI மூலம் உருவாக்கி சதி"
நூலக முறைகேடு மற்றும் சட்டம்-ஒழுங்கு விவகாரங்கள் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜ்மோகன்,"வரலாற்றுச் சிறப்புமிக்க கன்னிமரா நூலகத்தில் 523 போலி புத்தகங்களை நான் நேரில் ஆய்வு செய்து பறிமுதல் செய்தேன். ஆயுதங்கள், கள்ள நோட்டுகள் மற்றும் போதைப்பொருட்களை பிடிப்பது போல கள்ள புத்தகங்களை பிடித்தது மிகவும் வேதனையளிக்கிறது".
"செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கள்ளப் புத்தகங்களை உருவாக்கித் தமிழகம் முழுவதும் விநியோகித்துள்ளனர். லஞ்ச ஒழிப்புத் துறை மூலமாக விசாரணை துரிதப்படுத்தப்பட்டுள்ளது".
"டிசம்பர் மாதத்தில் பொது நூலகங்களுக்கு புதிய புத்தகங்கள் வாங்கப்படவுள்ளன. எந்தெந்தப் புத்தகங்களை வாங்க வேண்டும் என்பதைத் தேர்வு செய்ய அரசியலுக்கு அப்பாற்பட்ட எழுத்தாளர்கள் மற்றும் கல்வியாளர்கள் கொண்ட புதிய குழு அமைக்கப்படவுள்ளது" எனத்தெரிவித்தார்.
சட்டம்-ஒழுங்கு
கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ சர்ச்சை & சட்டம்-ஒழுங்கு
கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ சி. அருள் விக்னேஷ் மீதான புகார்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், "பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் புகார் அளிக்கப்பட்டால் எந்தவிதப் பாரபட்சமுமின்றி விசாரணை நடத்தப்பட்டு, குற்றம் நிரூபிக்கப்பட்டால் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
மேலும், போதை கலாசாரத்தை வேரோடு சாய்க்க உளவுத்துறை தகவல்களுடன் சோதனைகள் துரிதப்படுத்தப்பட்டு வருவதாகவும், காவல்துறை அரசியலுக்கு அப்பாற்பட்டு சுதந்திரமாகச் செயல்பட முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
பின்னணி
பெரியார் அறிவுலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
திமுக ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டு, கடந்த அக்டோபர் 16-ஆம் தேதி தமிழ்நாடு முதல்வர் விஜய்யால் திறந்து வைக்கப்பட்ட 7 தளங்களைக் கொண்ட கோவை 'பெரியார் அறிவுலகம்' நூலகத்திற்கு புத்தகங்கள் வாங்கியதில் பெரும் முறைகேடு நடந்துள்ளதாக எழுத்தாளர் பெருமாள் முருகன் குற்றம் சாட்டியிருந்தார்.
இல்லாத எழுத்தாளர்களின் பெயர்கள், வரலாற்றுத் தவறுகளுடன் கூடிய செயற்கையாக உருவாக்கப்பட்ட 523 போலி புத்தகங்கள் கண்டறியப்பட்டு அகற்றப்பட்டன.
இந்த விவகாரத்தைத் தொடர்ந்து, பொது நூலகத் துறை இயக்குநராக இருந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ஜெயந்தி உடனடியாகப் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
திமுக மற்றும் தவெக சார்பில் அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில், போலி புத்தகங்கள் வைக்கப்பட்டிருந்த 4-ஆவது தளத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தீவிர ஆவணச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.