Page Loader
உலகின் முதல் 5 மெதுவான நகரங்களில் மூன்று இந்தியாவில் உள்ளது: ஆய்வில் தகவல்
உலக அளவில் மெதுவாக நகரக்கூடிய நகரமாக இரண்டாவது இடத்தை பிடித்தது கொல்கத்தா

உலகின் முதல் 5 மெதுவான நகரங்களில் மூன்று இந்தியாவில் உள்ளது: ஆய்வில் தகவல்

எழுதியவர் Venkatalakshmi V
Apr 08, 2025
06:08 pm

செய்தி முன்னோட்டம்

டாம்டாம் போக்குவரத்து குறியீட்டின் 14வது பதிப்பில் வெளியிடப்பட்ட தகவல்படி, 2024 ஆம் ஆண்டில் உலகின் மெதுவான நகரங்களில் மூன்று இந்திய நகரங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த பட்டியலில் உலக அளவில் மெதுவாக நகரக்கூடிய நகரமாக இரண்டாவது இடத்தை பிடித்தது கொல்கத்தா. இங்கே 10 கி.மீ. பயணிக்க 34 நிமிடங்கள் 33 வினாடிகள் (மணிக்கு 17 கிமீ வேகம்) ஆவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. அதற்கு முக்கிய காரணிகளாக குறுகிய சாலைகள், பழைய உள்கட்டமைப்பு, சாலை நிலைமையின் மாறுபாடு ஆகியவை என கண்டறியப்பட்டுள்ளது. பட்டியலில் இடம்பிடித்துள்ள மற்ற நகரங்களை பார்ப்போமா?

மற்ற நகரங்கள்

பட்டியலில் பெங்களூரு, புனே, மும்பை மற்றும் சென்னை இடம்பிடித்துள்ளது

இந்த பட்டியலில் பெங்களூரு உலகளவில் 3வது இடத்தினை பிடித்துள்ளது. இங்கே 10 கி.மீ.க்கு பயணிக்க எடுத்துக்கொள்ளும் நேரம் 34 நிமிடங்கள் 10 வினாடிகள் ஆகும். இந்த நெரிசலுக்கு முக்கிய காரணிகளாக அதிக வாகனங்கள், பரந்த பெருநகர பகுதி, அதிக மக்கள் தொகை எனக்கூறப்படுகிறது. இதே பட்டியலில் புனே 4வது இடத்தினை பிடித்துள்ளது. இங்கே, 10 கி.மீ. பயணிக்க ஆகும் நேரம், 33 நிமிடங்கள் 22 வினாடிகள். ஆண்டுதோறும் இங்கே நெரிசல் நேரம் 108 மணிநேரங்கள் எனக்கண்டறியப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலுக்கு முக்கிய காரணிகளாக நகர வளர்ச்சி வேகத்தோடு உள்கட்டமைப்பு பொருந்தாமல் இருப்பது என ஆய்வறிக்கை கூறுகிறது. இந்த பட்டியலில், சென்னை 7வது மெதுவான மெட்ரோ நகரமாகவும், மும்பை 8வது மெதுவான மெட்ரோ நகரமாகவும் பட்டியலிடப்பட்டுள்ளது.

தரவரிசை

உலகளாவிய தரவரிசை மற்றும் காரணிகள்

இந்த பட்டியலில் முதல் இடத்தில் இருப்பது கொலம்பியவை சேர்ந்த பரன்குவிலா நகரம். 5வது இடத்தில், லண்டன் (ஐக்கிய இராச்சியம்) உள்ளது. சுவாரசியமாக இந்திய நகரங்கள் நெரிசல் சதவீதத்தில் முதலிடத்தில் இல்லாவிட்டாலும், உள்கட்டமைப்பு சவால்கள் மற்றும் அளவுக்கு மீறிய வாகன வளர்ச்சி காரணமாக மெதுவாகவே நகர்கின்றன. இருந்தும் நிலையான காரணிகளாக சாலை அகலம், அமைப்பு, வேக வரம்புகள் ஆகியவை கூறப்படுகின்றன. இந்திய நகரங்களில் போக்குவரத்து பிரச்சினைகளை சமாளிக்க உள்கட்டமைப்பு மேம்பாடு, சாலை விரிவாக்கம், மற்றும் பொது போக்குவரத்து வசதிகள் தேவைப்படுகிறது.