
போர் நிறுத்தத்திற்கு இடையே பாகிஸ்தான் மீது ராஜதந்திர தாக்குதலை தீவிரப்படுத்தும் இந்தியா
செய்தி முன்னோட்டம்
பாகிஸ்தானுக்கு எதிராக ராஜதந்திர தாக்குதலை தீவிரப்படுத்தும் முயற்சியில் இந்தியா ஈடுபட்டுள்ளது.
எல்லைகளில் போர் இடைநிறுத்தத்திற்கு இடையே, அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் குழு, சமீபத்திய மோதல்கள் மற்றும் இந்த விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து வெளிநாட்டு அரசாங்கங்களுக்கு விளக்கமளிக்கும் ஒரு சர்வதேச தொடர்புத் திட்டத்தை மேற்கொள்ள உள்ளதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.
மே 22-க்குப் பிறகு தொடங்கும் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை நாடாளுமன்ற விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு ஒருங்கிணைத்து வருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எம்.பி.க்களுக்கு ஏற்கனவே அழைப்புகள் அனுப்பப்பட்டுள்ளன எனவும் கூறப்படுகிறது.
விவரங்கள்
அனைத்து கட்சியினர் அடங்கிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு
ஒவ்வொரு குழுவிலும் 5-6 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அவர்கள் அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், தென்னாப்பிரிக்கா, கத்தார் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்குச் செல்வார்கள்.
இந்த பிரதிநிதிகளை வழிநடத்த மூத்த எம்.பி.க்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும், இந்தப் பொறுப்பு முதன்மையாக NDA நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஏப்ரல் 22 அன்று பாகிஸ்தானை தளமாகக் கொண்ட போராளிகளால் பஹல்காமில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியாவும் பாகிஸ்தானும் சமீபத்தில் அதிகரித்த இராணுவ மோதலில் சிக்கிக்கொண்டன.
இதற்கு பதிலடியாக, இந்தியா 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற திட்டத்தின் கீழ், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து பதிலடித் தாக்குதலை நடத்தியது.
ஆதரவு
மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிர் கட்சிகள் ஆதரவு
மே 10 அன்று, உயர் இராணுவ அதிகாரிகளுக்கு இடையேயான கலந்துரையாடல்களைத் தொடர்ந்து, பதட்டங்களைத் தணிக்க அண்டை நாடுகள் ஒரு உடன்பாட்டை எட்டின.
ஆபரேஷன் சிந்தூரைத் தொடர்ந்து, பாதுகாப்பு நிலைமை மற்றும் எதிர்கால வழி குறித்து அரசியல் தலைவர்களுக்கு விளக்க அரசாங்கம் சம்பீத்தில் அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டியது.
கூட்டத்தின் போது, பாகிஸ்தானின் தாக்குதலைக் கையாள்வதில் அரசாங்கத்திற்கு எதிர்க்கட்சிகள் தனது ஆதரவைத் தெரிவித்தது.
இஸ்லாமாபாத்திற்கு எதிரான நடவடிக்கைகளை புது தில்லி தீவிரப்படுத்தியதால், சர்வதேச ஆதரவைப் பெறுவதற்காக அரசாங்கம் பல நாடுகளின் உயர் அதிகாரிகள் மற்றும் வெளியுறவு அமைச்சர்களுடன் ஈடுபட்டது.
ஏற்கனவே பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா, விசாக்களை ரத்து செய்தல், நில எல்லைகள் மற்றும் வான்வெளியை மூடுதல் என தொடர்ச்சியான ராஜதந்திர நடவடிக்கைகளை அறிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.