'அயன்' படப்பாணியில் அரங்கேறிய தங்க கடத்தல் நாடகம்; ₹69 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்
நடிகர் சூர்யா நடிப்பில், மறைந்த இயக்குனர் KV ஆனந்த் இயக்கத்தில் வெளியான சூப்பர்ஹிட் திரைப்படம் 'அயன்'. வெளிநாடுகளிலிருந்து கடத்தி வரப்படும் தங்க கட்டிகளையும், சட்ட விரோதமான பொருட்களையும் பற்றிய படம் அது. இதில் தங்கம் உள்ளிட்ட சட்ட விரோதமான பொருட்களை கடத்தல்காரர்கள் வலுக்கட்டாயமாக, வயிறு நிறைய உண்பார்கள். அவர்களால் விமானத்தில் அதன் பின்னர், தண்ணீரோ, உணவோ சாப்பிட முடியாது. சேர வேண்டிய இடத்திற்கு சென்ற பின்னர், அவர்கள் வயிற்றிலிருந்து அப்பொருட்கள் எடுக்கப்படும். இதே பாணியில், தற்போது ஏர் இந்தியா விமான பயணி ஒருவர், ₹69 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை ஜேடாவிலிருந்து டெல்லிக்கு கடத்தி வந்தார். ஆனால் விமான பணிப்பெண்ணின் சாமர்த்தியத்தால் அவர் டெல்லி விமான நிலையத்திலேயே கைது செய்யப்பட்டார்.
கடத்தல் நாடகம் அம்பலம்
ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த நபர், ஐந்தரை மணி நேரப் பயணம் முழுவதும் தண்ணீர் உட்பட எவ்வித குளிர்பானங்களையும் தொடர்ந்து மறுத்து வந்தார். இந்த அசாதாரண நடத்தை விமானப் பணிப்பெண்ணை விமானக் கேப்டனை எச்சரிக்கத் தூண்டியது. பின்னர் கேப்டன், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுக்குத் தகவல் தெரிவித்தார். டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியதும், பாதுகாப்பு நிறுவனங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அப்பயணி கண்காணிப்பில் வைக்கப்பட்டார். விசாரணையில், ஜெட்டாவில் இருந்து தங்கம் கடத்தி வந்ததை ஒப்புக்கொண்டார். பயணி தனது மலக்குடலில் தங்க பேஸ்டை மறைத்து வைத்திருந்ததை ஒப்புக்கொண்டார். பின்னர் அது நான்கு ஓவல் காப்ஸ்யூல்கள் வடிவில் பிரித்தெடுக்கப்பட்டது. அவரிடமிருந்து சுமார் 1,096.76 கிராம் தங்கம் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் பின்னர் உறுதி செய்தனர்.