9 மாவட்டங்களில் தொடரும் கனமழை; பள்ளிகள் விடுமுறை குறித்து விரைவில் அறிவிப்பு
தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, உள்ளிட்ட 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரம் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழையின் துவக்கமாக தென் கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. அதன் காரணமாக தமிழகம் முழுவதும், நேற்றிரவு கனமழை கொட்டியது. சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர், கடலூர், விழுப்புரம் ஆகிய 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்குள் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளது.
பள்ளிகளுக்கு விடுமுறை தொடருமா?
மழை காரணமாக வெள்ள நிவாரண பணிகளை மேற்பார்வை செய்த துணை முதலமைச்சர் உதயநிதி, சென்னையில் 300 நிவாரண முகாம்கள் மற்றும் 130 படகுகள் தயாராக உள்ளன என்றும், பள்ளி விடுமுறை பற்றி இன்று மாலை முதல்வர் அறிவிப்பார் என்றும் தெரிவித்தார். சென்னை எழிலகத்தில் மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் ஆய்வுகளை மேற்கொண்ட பின்னர் அவர் இதனை தெரிவித்தார். மேலும், கனமழை காரணமாக வெள்ளம் ஏற்படும் சூழலில், சென்னையில் 89 படகு உட்பட பல்வேறு மாவட்டங்களில் மொத்தம் 130 படகுகள் தயார் நிலையில் உள்ளது என அவர் தெரிவித்துள்ளார். மேலும் தமிழகம் முழுவதும் ஆயிரம் மருத்துவ முகாம்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன எனக்கூறினார்.