இஸ்ரேல்-பாலஸ்தீனப் போரால் இந்தியாவுக்கு என்ன பாதிப்புகள் ஏற்படும்?
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனப் போராளிகளுக்கும் ஏற்பட்டிருக்கும் போரால், உலகமே இரண்டாக பிரிந்துள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் இஸ்ரேலுக்கு வெளிப்படையாக உதவி செய்து வரும் நிலையில், ஈரான் உள்ளிட்ட அரபு நாடுகள் பாலஸ்தீனப் போராளிகளுக்கு துணை நிற்பதாக கூறப்படுகிறது. இப்படி உலகமே இரண்டாக பிரிந்துள்ள நிலையில், இந்தியா இராஜதந்திர ரீதியாக கடினமான சூழ்நிலையை எதிர்கொண்டுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளுடன் இந்தியா தனது உறவை வலுவடைய செய்து கொண்டிருந்த நேரத்தில் இந்த போர் மூண்டுள்ளது. இஸ்ரேலில் போர் தொடங்கியதும் அது குறித்து ட்விட்டரில் பதிவிட்டிருந்த பிரதமர் மோடி, "பயங்கரவாத தாக்குதல்கள் பற்றிய செய்தியால் மிகவும் அதிர்ச்சியடைந்தேன். இந்த கடினமான நேரத்தில் நாங்கள் இஸ்ரேலுடன் ஒற்றுமையாக நிற்கிறோம்." என்று தெரிவித்திருந்தார்.
இந்தியா-மத்திய கிழக்கு நாடுகள்-ஐரோப்பா வழித்தடம் பாதிக்கப்படக்கூடும்
இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இதுவரை அதிகாரபூர்வ அறிக்கையை வெளியிடவில்லை. ஆனால், பிரதமர் மோடியின் ட்விட்டர் பதிவை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும், வெளியுறவு அமைச்சகமும் ரீட்வீட் செய்திருந்தனர். அதனால், தொடர்ந்து இஸ்ரேலுக்கு ஆதரவாக இந்தியா பேசுமா என்பது இன்னும் சரியாக தெரியவில்லை. ஒரு மாதத்திற்கு முன்பு நடந்த ஜி20 உச்சி மாநாட்டில், இந்தியா-மத்திய கிழக்கு நாடுகள்-ஐரோப்பா ஆகியவற்றை இணைக்கும் இணைப்பு வழித்தடத்தை இந்தியா தொடங்கி வைத்தது. அமெரிக்கா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நாடுகள் இதற்கு ஆதரவு தெரிவித்திருந்தன.
பாலஸ்தீனர்களுக்கு குரல் கொடுத்து வரும் சவுதி அரேபியா
இந்நிலையில், அது நடந்து ஒரு மாதத்திற்குள் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர் தொடங்கியுள்ளது. இந்த இஸ்ரேல்-பாலஸ்தீனப் போரில், இந்தியாவும் அமெரிக்காவும் தெளிவாக இஸ்ரேலுக்கு சார்பாக குரல் கொடுத்து வருகின்றன. அமெரிக்கா, இஸ்ரேலுக்கு ஆதரவாக தனது போர் வாகனங்களை இஸ்ரேல் நாட்டுக்கு அனுப்பியுள்ளது. ஆனால், சவுதி அரேபியா இஸ்ரேலுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறது. வன்முறையை உடனடியாக நிறுத்துமாறு அழைப்பு விடுத்துள்ள சவுதி அரேபியா, பாலஸ்தீனிய மக்களின் நியாயமான உரிமைகளை வழங்க மறுப்பதால் தான் இந்த போர் நடக்கிறது என்று இஸ்ரேலை எச்சரித்து வருகிறது. எனவே, இந்தியாவின் லட்சியத் திட்டமான "இந்தியா-மத்திய கிழக்கு நாடுகள்-ஐரோப்பா வழித்தடத்தை" இந்த போர் சிதைக்கக்கூடும்
மத்திய கிழக்கு நாடுகளுடனான உறவுகள் கடுமையாக பாதிக்கும்
சவுதி அரேபியா-இந்தியா உறவுகளுக்கு நரேந்திர மோடி அரசாங்கம் அதிகமாக உழைத்து வருகிறது. இந்த இரண்டு நாடுகளுக்கு இடையேயான உறவுகளை வலிமையாக்கும் மூலோபாய கூட்டாண்மை கவுன்சில்(SPC) ஒப்பந்தமும் சமீபத்தில் கையெழுத்திடப்பட்டன. அண்மையில், பிரதமர் மோடி சவுதி அரேபியாவுக்கு சென்றிருந்த போது அந்நாட்டின் உயரிய குடிமகன் விருது அவருக்கு வழங்கப்பட்டது. அது போக, ஜோர்டான், ஓமன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பாலஸ்தீனம், கத்தார் மற்றும் எகிப்து ஆகிய மத்திய கிழக்கு நாடுகளுக்கு பிரதமர் மோடி சமீபத்தில் பயணம் மேற்கொண்டது, மத்திய கிழக்கு நாடுகளுக்கு இந்தியா எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறது என்பதை காட்டுகிறது.
மத்திய கிழக்கு நாடுகளை எதிர்க்குமா இந்தியா?
முன்பு, மத்திய கிழக்கு நாடுகளுடனான இந்தியாவின் உறவு வெறும் வர்த்தக ரீதியாக மட்டும் தான் இருந்தது. ஆனால், தற்போது சீனாவை எதிர்த்து இந்தியா முன்னேற நினைப்பதால், மத்திய கிழக்கு நாடுகளுடனான இந்தியாவின் உறவுகள் மூலோபாய ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. எனவே, தற்போதைய சூழ்நிலையில், ஏதாவது ஒரு தரப்பினருக்கு இந்தியா ஆதரவு தெரிவிப்பது என்பது பல மத்திய கிழக்கு நாடுகளுக்கு எதிராக நிற்பதற்கு சமம். மேலும், அது இந்தியாவின் வர்த்தக உறவுகளையும் மூலோபாய உறவுகளையும் கடுமையாக பாதிக்கும். இதே காரணத்திற்காக தான், ரஷ்ய-உக்ரைன் போரின் போது, இந்தியா எந்த ஒரு கருத்தும் சொல்லாமல் ஒதுங்கிவிட்டது.