Loading...
தனியார் பள்ளி அனுமதி ஊழல் வழக்கு: முன்னாள் திமுக அமைச்சர் அன்பில் மகேஷ் ஜாமீன் மனு தள்ளுபடி
முன்னாள் திமுக அமைச்சர் அன்பில் மகேஷ் ஜாமீன் மனு தள்ளுபடி

தனியார் பள்ளி அனுமதி ஊழல் வழக்கு: முன்னாள் திமுக அமைச்சர் அன்பில் மகேஷ் ஜாமீன் மனு தள்ளுபடி

எழுதியவர் Venkatalakshmi V
Nov 10, 2026
02:16 pm

செய்தி முன்னோட்டம்

தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்குவதில் ரூ.400 கோடிக்கு மேல் சட்டவிரோதமாக நிதி வசூலித்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் திமுக அமைச்சர் அன்பில் மகேஷின் ஜாமீன் மனுவை சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. கடந்த அக்டோபர் 26-ஆம் தேதி சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்ட அன்பில் மகேஷ், தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது நீதிமன்ற காவல் வரும் நவம்பர் 18 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

வழக்கு பின்னணி

ரூ.400 கோடி ஊழல் என குற்றச்சாட்டு

முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் பள்ளிக்கல்வி துறை அமைச்சராக இருந்த அன்பில் மகேஷ் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன.

தமிழகத்தில் உள்ள 1,000-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு பல்வேறு அரசு அங்கீகாரங்கள் மற்றும் அனுமதிகளை பெற்று தருவதாகக் கூறி, ரூ.400 கோடிக்கும் அதிகமாக சட்டவிரோதமாகப் பணம் வசூலிக்கப்பட்டதாக புகார்கள் எழுந்தன.

சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸார் நடத்திய விசாரணையின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ், தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ முத்துகுமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

ஜாமீன்

ஜாமீன் மனு தள்ளுபடி

சிறையில் இருக்கும் அன்பில் மகேஷ் தாக்கல் செய்த ஜாமீன் மனு, சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி எல்.எஸ். சத்தியமூர்த்தி முன்பாக விசாரணைக்கு வந்தது.

விசாரணையின் போது, "காவல்துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கத் தயாராக உள்ளோம்" என அன்பில் மகேஷ் தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.

இருப்பினும், வழக்கில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, அவரது ஜாமீன் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

சிறைக்காவல் நீட்டிக்கப்பட்டு ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அன்பில் மகேஷ் தரப்பில் விரைவில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT