தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக நிபந்தனை ஆதரவு: தமிழகத்தின் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட்டால் பரிசீலிக்கத் தயார் எனத் தகவல்
செய்தி முன்னோட்டம்
வரும் நவம்பர் 30-ஆம் தேதி தொடங்கவுள்ள நாடாளுமன்ற சிறப்பு அமர்வில் மத்திய அரசு கொண்டுவரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுவரையறை மசோதா குறித்து தென்னிந்தியப் பிராந்தியக் கட்சிகளிடையே புதிய நிலைப்பாடுகள் உருவாகியுள்ளன. மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறைக்குத் தொடக்கம் முதலே கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்த திமுக, நாடாளுமன்றத்தில் தமிழகத்தின் தற்போதைய பிரதிநிதித்துவ விகிதம் பாதுகாக்கப்பட்டால் மசோதாவை ஆதரிப்பது குறித்து பரிசீலிக்கத் தயாராக இருப்பதாக திமுக வட்டாரங்களை மேற்கோள்காட்டி சிஎன்என்-நியூஸ்18 மற்றும் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதேபோல், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியும் இம்மசோதாவுக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிபந்தனைகள்
திமுக முன்வைக்கும் முக்கிய நிபந்தனைகள் என்ன?
மக்களவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையை 543-லிருந்து 850 வரை அதிகரித்து, 2029 பொதுத்தேர்தலுக்கு முன்னதாக 33 சதவீத மகளிர் இடஒதுக்கீட்டை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பாக திமுக கட்சி வட்டாரங்கள் கூறுகையில், புதிய மசோதாவின் வரைவில் மக்களவையில் தமிழகத்திற்கு உள்ள தற்போதைய 7.2 சதவீத இடங்களின் பங்கு குறையாமல் பாதுகாக்கப்படுவதோடு, அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையிலான தொகுதி மறுவரையறை அடுத்த 25 ஆண்டுகளுக்குப் பிறகே மேற்கொள்ளப்படும் என்ற உத்தரவாதம் இடம்பெற்றால், அதனை ஆதரிப்பது குறித்துத் தலைமை பரிசீலிக்கும் எனத் தெரிவித்துள்ளன.
2027 மக்கள் தொகை கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு தொகுதிகள் பிரிக்கப்பட்டால் தமிழகத்தின் பிரதிநிதித்துவம் குறையும் என்பதாலேயே இதுவரை எதிர்த்து வந்ததாகவும் அக்கட்சி வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
சட்டமன்றத் தீர்மானம்
2024 சட்டமன்றத் தீர்மானமும் கூட்டணிக் கட்சிகளின் எதிர்வினையும்
கடந்த 2024 பிப்ரவரி 14-ஆம் தேதி, அப்போதைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழக சட்டமன்றத்தில் கொண்டு வந்த தீர்மானத்தில், 1971 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையிலான விகிதாச்சாரம் தொடர வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது.
தற்போது திமுக நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக வெளியாகும் தகவல்கள் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI-M) மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் கவலை தெரிவித்துள்ளார்.
மத்திய அரசுடன் திமுக உடன்பாடு எட்டியுள்ளதாக வெளியாகும் செய்திகள் கவலையளிப்பதாகவும், தமிழகம் மற்றும் தென் மாநிலங்களின் நலனைப் பாதுகாப்பதில் திமுக உறுதியாக இருக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
பெரும்பான்மை கணக்கு
மாறியுள்ள தமிழக அரசியல் சூழலும், பெரும்பான்மை கணக்கும்
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ், திமுக உடனான கூட்டணியை முறித்துக் கொண்டு, ஆளும் தவெக அரசில் இணைந்துள்ள நிலையில், திமுக - காங்கிரஸ் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
இதனால், பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு தேசியக் கட்சிகளிடமும் சமதூரத்தைக் கடைப்பிடித்து, தமிழக நலன் சார்ந்த விவகாரங்களில் தனித்தன்மையுடன் முடிவெடுக்க திமுக தலைமை திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மறுபுறம், கடந்த ஏப்ரல் மாதம் அரசியலமைப்பு (131-வது திருத்த) மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு எடுத்த முயற்சி, மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைக்காததால் தோல்வியடைந்தது.
தற்போது மசோதாவை நிறைவேற்ற திமுக (22 எம்.பி.க்கள்) மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் போன்ற பிராந்தியக் கட்சிகளின் ஆதரவு மத்திய அரசுக்கு மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது