13-17 வயதினருக்கான 'Parental Controls' வசதியை அறிமுகப்படுத்தியது X: பெற்றோர்களால் எதையெல்லாம் கட்டுப்படுத்த முடியும்?
செய்தி முன்னோட்டம்
தளத்தைத் தொடங்கி கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு பிறகு எலான் மஸ்க்கிற்கு சொந்தமான சமூக வலைதளமான எக்ஸ் (X) 13 முதல் 17 வயதுக்குட்பட்ட பதின்ம வயதினருக்கான பெற்றோர் கட்டுப்பாட்டு (Parental Controls) வசதியை நவம்பர் 27 முதல் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய அமைப்பின் கீழ் பெற்றோர்களும் பாதுகாவலர்களும் தங்கள் குழந்தைகளின் இணையப் பயன்பாட்டைக் கண்காணிக்கவும் உள்ளடக்கம் மற்றும் தொடர்புகளைக் கட்டுப்படுத்தவும் முடியும். இதன் கீழ் 13 முதல் 17 வயதுக்குட்பட்டவர்களின் கணக்குகள் தானாகவே பாதுகாக்கப்பட்ட நிலைக்கு மாற்றப்பட்டு மிகவும் சென்சிட்டிவான கன்டென்ட்கள் மற்றும் இலக்கு வைக்கப்பட்ட விளம்பரங்கள் காட்டப்படுவது தடுக்கப்படும்.
பெற்றோர்களால் நிர்வகிக்க முடிபவை
தினசரி நேர வரம்பு முதல் DM கட்டுப்பாடு வரை பெற்றோர்களால் நிர்வகிக்க முடிபவை என்ன?
பெற்றோரும் பதின்ம வயதினரும் பரஸ்பரம் சம்மதித்து கணக்குகளை இணைத்த பிறகு வாராந்திர பயன்பாட்டு நேரத்தை பார்க்கவும் 15 நிமிட இடைவெளிகளில் தினசரி ஸ்கிரீன் நேர வரம்பை நிர்ணயிக்கவும் முடியும்.
மேலும் புதிய ஃபாலோயர்களை அங்கீகரித்தல், பரிந்துரைக்கப்படும் பதிவுகள் மற்றும் வீடியோக்களைப் பின்தொடரும் கணக்குகளுக்குள் மட்டும் கட்டுப்படுத்துதல், குறிப்பிட்ட வார்த்தைகளைத் தடுத்தல் மற்றும் சென்சிட்டிவான மீடியாவை முடக்குதல் ஆகிய வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன.
இத்துடன் தங்கள் குழந்தைகளுக்கு யார் நேரடியாக செய்திகளை DM-ல் அனுப்பலாம் என்பதைத் தீர்மானிக்கவும் குழந்தைகள் எந்தக் கணக்குகளுடன் உரையாடுகிறார்கள் என்பதைப் பார்க்கவும் பெற்றோருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தனியுரிமை வரம்புகள்
தனிப்பட்ட மெசேஜ்கள் மற்றும் தேடல் வரலாற்றைப் பார்க்க முடியாத தனியுரிமை வரம்புகள்
பெற்றோருக்குக் கட்டுப்பாட்டு அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்தாலும் பதின்ம வயதினரின் தனியுரிமை மற்றும் சுதந்திரத்தைப் பாதுகாப்பதில் எக்ஸ் தளம் சில தெளிவான வரம்புகளை வகுத்துள்ளது.
அதன்படி பெற்றோர்களால் தங்கள் குழந்தைகளின் தனிப்பட்ட உரையாடல்களில் உள்ள செய்திகளையோ அல்லது அவர்களின் தேடல் மற்றும் பார்வை வரலாற்றையோ பார்க்க முடியாது.
மேலும் குழந்தையின் கணக்கிற்குள் உள்நுழைந்து கடவுச்சொல்லை மாற்றவோ அவர்களுக்குப் பதிலாகப் பதிவிடவோ பெற்றோருக்கு அனுமதி இல்லை.
பெற்றோர் செய்யும் ஒவ்வொரு மாற்றமும் பதின்ம வயதினரின் கணக்கிலும் வெளிப்படையாகத் தெரியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
குழந்தைகள் பாதுகாப்பு
க்ரோக் ஏஐ சர்ச்சையும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விமர்சனங்களும்
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோக உள்ளடக்கங்கள் தவறான தகவல்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்படும் ஆபாசப் படங்கள் தொடர்பாக எக்ஸ் தளம் தொடர்ந்து கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
குறிப்பாக கடந்த ஜனவரி 2026-ல் எக்ஸ் தளத்தின் க்ரோக் ஏஐ சாட்பாட் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகளின் அனுமதியற்ற ஆபாசப் படங்கள் உருவாக்கப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த சூழலில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பெற்றோர் கட்டுப்பாட்டு அம்சம் வரவேற்கத்தக்க நடவடிக்கையாகப் பார்க்கப்பட்டாலும் முழுமையான உள்ளடக்கத் தணிக்கை இல்லாமல் தளத்தைக் குழந்தைகளுக்கு முழுப் பாதுகாப்பானதாக மாற்ற முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.