Loading...
14 ஆண்டுகளுக்குப் பிறகு 2028 தாமஸ் & உபர் கோப்பையை நடத்தும் இந்தியா: BWF அதிரடி மாற்றங்கள்
14 ஆண்டுகளுக்குப் பிறகு 2028 தாமஸ் & உபர் கோப்பையை நடத்துகிறது இந்தியா

14 ஆண்டுகளுக்குப் பிறகு 2028 தாமஸ் & உபர் கோப்பையை நடத்தும் இந்தியா: BWF அதிரடி மாற்றங்கள்

எழுதியவர் Sekar Chinnappan
Nov 26, 2026
11:25 am

செய்தி முன்னோட்டம்

உலக பேட்மிண்டன் கூட்டமைப்பு (BWF) புதன்கிழமை (நவம்பர் 25) வெளியிட்ட முக்கிய அறிவிப்பில் 2028 ஆம் ஆண்டிற்கான தாமஸ் மற்றும் உபர் கோப்பை பேட்மிண்டன் தொடரை இந்தியா நடத்தும் எனத் தெரிவித்துள்ளது. இதன் மூலம், பேட்மிண்டன் உலகக் கோப்பை என அழைக்கப்படும் இந்த புகழ்பெற்ற அணிகள் சாம்பியன்ஷிப் தொடர் பதினான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்தியாவுக்குத் திரும்புகிறது. முன்னதாக 2014 ஆம் ஆண்டு புதுடெல்லியில் இத்தொடர் நடைபெற்றதோடு இந்த ஆண்டு உலக சாம்பியன்ஷிப் போட்டிகளும் இங்கு வெற்றிகரமாக நடத்தப்பட்டன. மேலும் 2027 உலக சாம்பியன்ஷிப் கனடாவின் மிசிசாகாவிலும் 2029 சுதிர்மன் கோப்பை தென் கொரியாவிலும் 2030 தாமஸ் கோப்பை பாரிஸிலும் நடைபெற உள்ளன.

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்

2027 முதல் ஒலிம்பிக் பாணியில் நடைபெறவுள்ள உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்

உலக பேட்மிண்டன் கூட்டமைப்பு தனது முக்கியத் தொடர்களின் போட்டி அமைப்பில் புரட்சிகரமான மாற்றங்களை அறிவித்துள்ளது.

இதன்படி 2027 ஆம் ஆண்டு முதல் பேட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப் போட்டிகள் நேரடி நாக்-அவுட் முறைக்குப் பதிலாக ஒலிம்பிக் போட்டி பாணியில் குழு மற்றும் நாக்-அவுட் சுற்றுகளாக நடத்தப்படும்.

ஒற்றையர் பிரிவில் 48 வீரர்கள் மூன்று பேர் கொண்ட பதினாறு குழுக்களாகவும் இரட்டையர் பிரிவில் 32 இணைகள் நான்கு இணைகள் கொண்ட எட்டு குழுக்களாகவும் பிரிக்கப்படுவர்.

ஒவ்வொரு குழுவிலும் முதலிடம் பிடிக்கும் வீரர்கள் அடுத்த சுற்றுக்கு முன்னேறுவார்கள்.

தாமஸ் கோப்பை

24 அணிகள் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட தொடராக மாறும் தாமஸ் மற்றும் உபர் கோப்பை

அணிகள் பங்கேற்கும் சுதிர்மன் கோப்பை தாமஸ் கோப்பை மற்றும் உபர் கோப்பை ஆகிய மூன்று தொடர்களிலும் இனி 24 அணிகள் பங்கேற்கும் வகையில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

தாமஸ் மற்றும் உபர் கோப்பையில் 24 அணிகள் ஆறு அணிகள் கொண்ட நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு ஐந்து போட்டிகளுக்குப் பதிலாக மூன்று போட்டிகள் கொண்ட தொடராக விளையாடும்.

இதில் மூன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் வெற்றி பெற்றால் ஐந்து புள்ளிகளும் இரண்டுக்கு ஒன்று என்ற வெற்றியில் நான்கு புள்ளிகளும் இரண்டுக்கு ஒன்று என்ற தோல்வியில் ஒரு புள்ளியும் வழங்கப்படும்.

ADVERTISEMENT

புதிய முறை

சுதிர்மன் கோப்பை புதிய புள்ளி விதிகளும் 3x15 புள்ளி முறையின் அறிமுகமும்

சுதிர்மன் கோப்பை தொடரில் 24 அணிகள் எட்டு அணிகள் கொண்ட மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு பாரம்பரிய ஐந்து போட்டிகள் கொண்ட வடிவத்திலேயே விளையாடும்.

இதில் ஐந்துக்கு பூஜ்ஜியம் என்ற வெற்றியில் ஏழு புள்ளிகளும் நான்குக்கு ஒன்று வெற்றியில் ஆறு புள்ளிகளும் மூன்றுக்கு இரண்டு வெற்றியில் ஐந்து புள்ளிகளும் வழங்கப்படும்.

தோல்வியடையும் அணிகளுக்கு மூன்றுக்கு இரண்டு கணக்கில் இரண்டு புள்ளிகளும் நான்குக்கு ஒன்று கணக்கில் ஒரு புள்ளியும் கிடைக்கும்.

மேலும் 2026 ஆம் ஆண்டுடன் 21 புள்ளி முறை முடிவுக்கு வந்து அனைத்துப் போட்டிகளும் மூன்றுக்கு பதினைந்து புள்ளி முறையில் நடத்தப்படும்.

ADVERTISEMENT