Loading...
இந்திய ஏற்றுமதிகள் மீது 25% வரை வரி விதிக்க அமெரிக்கா முன்மொழிவு: மருந்துகள் & ஸ்மார்ட்போன்களுக்கு விலக்கு
இந்திய ஏற்றுமதிகள் மீது 25% வரை வரி விதிக்க அமெரிக்கா முன்மொழிவு

இந்திய ஏற்றுமதிகள் மீது 25% வரை வரி விதிக்க அமெரிக்கா முன்மொழிவு: மருந்துகள் & ஸ்மார்ட்போன்களுக்கு விலக்கு

எழுதியவர் Sekar Chinnappan
Nov 26, 2026
10:39 am

செய்தி முன்னோட்டம்

அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகம் நேற்று (நவம்பர் 25) வெளியிட்ட அறிவிப்பில் இந்தியப் பொருட்கள் மீது 25 சதவீதம் வரை கூடுதல் இறக்குமதி வரி விதிக்க முன்மொழிந்துள்ளது. இருப்பினும் இரு நாடுகளுக்கும் இடையே பரஸ்பர வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானால் இந்த வரி 17 சதவீதமாகக் குறைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உற்பத்தித் துறையில் அதிகப்படியான திறனைக் கொண்டுள்ளதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ள 14 நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். இந்த புதிய வரி முன்மொழிவு இன்னும் இறுதி செய்யப்படாத நிலையில் இந்திய ஏற்றுமதியாளர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

விலக்கு அளிக்கப்பட்ட துறைகள்

தற்போதைய 10% வரியுடன் புதிய வரி எவ்வாறு கணக்கிடப்படும் மற்றும் விலக்கு அளிக்கப்பட்ட துறைகள்

கடந்த ஜூலை 24 ஆம் தேதி முதல் பெரும்பாலான இந்தியப் பொருட்களுக்கு விதிக்கப்பட்டு வரும் பத்து சதவீதக் கூடுதல் வரியுடன் இந்த புதிய வரி சேர்க்கப்படாது எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

இரண்டில் எந்த வரி அதிகமாக உள்ளதோ அதையே இறக்குமதியாளர்கள் செலுத்த வேண்டும் என்பதால் ஏற்றுமதியாளர்களுக்கு 7 முதல் 15 சதவீதப் புள்ளிகள் வரை கூடுதல் சுமை ஏற்படும்.

இதில் எஃகு, அலுமினியம், தாமிரம் மற்றும் வாகன உதிரிபாகங்கள் போன்ற பிரிவு 232 பொருட்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியாவின் மிகப்பெரிய ஏற்றுமதிகளான ஜெனரிக் மருந்துகள் மற்றும் ஸ்மார்ட்போன்களுக்கும் முழு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ஆசிய போட்டி

ஆயத்த ஆடை, இறால் மற்றும் சூரிய மின்சக்தித் துறைகளுக்கு ஏற்படும் பாதிப்பும் ஆசிய போட்டியும்

மருந்து மற்றும் ஸ்மார்ட்போன் துறைகள் தப்பியபோதிலும் ஆபரணங்கள், ஆயத்த ஆடைகள், இறால், சூரிய மின்சக்தி உபகரணங்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் ஆகியவை 25 சதவீத வரி அபாயத்தை எதிர்கொள்கின்றன.

இந்தியா அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்துகொண்டு 17 சதவீத வரி விகிதத்தைப் பெற்றால் ஆசியாவில் உள்ள போட்டி நாடுகளை விட சாதகமான நிலையைப் பெறும்.

ஏனெனில் ஆயத்த ஆடைத் துறையில் வங்கதேசம் மற்றும் கம்போடியா 18 சதவீதமும் வியட்நாம் 20 முதல் 35 சதவீதமும் வரியை எதிர்கொள்கின்றன.

அதேபோல் இறால் ஏற்றுமதியில் இந்தோனேசியா மற்றும் தாய்லாந்தை விட இந்தியாவிற்கு குறைந்த வரி விதிக்கப்படும்.

ADVERTISEMENT

2027 ஜனவரி காலக்கெடு

17% வரிச் சலுகையைப் பெற அமெரிக்கா விதித்துள்ள நிபந்தனைகளும் 2027 ஜனவரி காலக்கெடுவும்

17 சதவீதக் குறைந்த வரி விகிதத்தைப் பெற வேண்டுமானால் மேக் இன் இந்தியா, உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டம், தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் சீன முதலீடுகள் குறித்த அமெரிக்காவின் கவலைகளுக்கு இந்தியா தீர்வு காண வேண்டும்.

ஆனால் தனது திட்டங்கள் தற்சார்புக்காக உருவாக்கப்பட்டவை எனக் கூறி அமெரிக்காவின் குற்றச்சாட்டை இந்தியா மறுத்துள்ளது.

அடுத்த மாதம் புளோரிடாவில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடியும் அதிபர் டிரம்பும் சந்திக்க உள்ளனர்.

இந்த வரி முன்மொழிவு குறித்த எழுத்துப்பூர்வ கருத்துகளை சமர்ப்பிக்க ஜனவரி 5 ஆம் தேதியும் பொது விசாரணைக்கு ஜனவரி 25 ஆம் தேதியும் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT