Loading...
அம்பாசமுத்திரம், பெருந்துறை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த அனுமதி: திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலைக்கு தடை 
அம்பாசமுத்திரம், பெருந்துறை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த அனுமதி

அம்பாசமுத்திரம், பெருந்துறை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த அனுமதி: திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலைக்கு தடை 

எழுதியவர் Venkatalakshmi V
Nov 27, 2026
11:35 am

செய்தி முன்னோட்டம்

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கக் கோரிய வழக்கில், அம்பாசமுத்திரம் மற்றும் பெருந்துறை ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் நடத்த அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. அதே சமயம், திருச்சி கிழக்கு, கரூர் மற்றும் விராலிமலை ஆகிய மூன்று தொகுதிகள் தொடர்பான தேர்தல் வழக்குகள் முடிவுக்கு வந்தால் மட்டுமே அங்கு இடைத்தேர்தல் நடத்த அனுமதிக்க முடியும் என நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

தீர்ப்பு

தலைமை நீதிபதி அமர்வு வழங்கிய முக்கியத் தீர்ப்பு

திருச்சி கிழக்கு, பெருந்துறை, அம்பாசமுத்திரம், விராலிமலை மற்றும் கரூர் ஆகிய 5 தொகுதிகளின் தேர்தல் வெற்றிக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்குகள் நிலுவையில் இருக்கும்போது இடைத்தேர்தல் நடத்தக் கூடாது எனக் கோரி வழக்கறிஞர் வெங்கடாசலபதி பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் கடந்த ஜூலை 10-ஆம் தேதி 5 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்த இடைக்காலத் தடை விதித்தது. இந்தத் தடையை நீக்கக் கோரி முதலமைச்சர் விஜய் உள்ளிட்டோர் தாக்கல் செய்த துணை மனுக்கள் மீதான அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று இந்த முக்கியத் தீர்ப்பை வழங்கியுள்ளது.

தடை நீக்கம்

அம்பாசமுத்திரம், பெருந்துறை தொகுதிகளுக்கான தடை நீக்கம் ஏன்?

இடைத்தேர்தல் நடத்தப்பட்ட பிறகு, ஏற்கெனவே நிலுவையில் உள்ள தேர்தல் வழக்கில் வேறொரு வேட்பாளர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டால், ஒரே தொகுதிக்கு இரண்டு எம்.எல்.ஏ.-க்கள் உருவாகும் சட்டச் சிக்கல் ஏற்படும் என்பதே மனுதாரரின் முக்கிய வாதமாக இருந்தது.

ஆனால், அம்பாசமுத்திரம் மற்றும் பெருந்துறை ஆகிய இரு தொகுதிகள் தொடர்பாகத் தொடரப்பட்டிருந்த தேர்தல் வழக்குகள் ஏற்கெனவே முடிவுக்கு வந்துள்ளதால், அத்தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்துவதற்கு எவ்விதச் சட்டத் தடையும் இல்லை எனக் கூறி தடையை நீக்கி நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

ADVERTISEMENT

தடை

திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலைக்குத் தடை தொடர்கிறது

மறுபுறம், முதலமைச்சர் விஜய் ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு தொகுதி மற்றும் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ.-க்கள் ராஜினாமா செய்த கரூர், விராலிமலை ஆகிய மூன்று தொகுதிகள் தொடர்பான தேர்தல் வழக்குகள் நீதிமன்றத்தில் இன்னும் நிலுவையில் உள்ளன.

எனவே, அந்தத் தேர்தல் வழக்குகள் முறையாக விசாரித்து முடிக்கப்பட்டால் மட்டுமே இந்த மூன்று தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்த அனுமதிக்க முடியும் எனத் தெளிவுபடுத்தியுள்ள உயர்நீதிமன்றம், அங்கு இடைத்தேர்தலுக்கான தடையை நீட்டித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பைத் தொடர்ந்து, அம்பாசமுத்திரம் மற்றும் பெருந்துறை ஆகிய இரு தொகுதிகளுடன், அண்மையில் MLA மறைவால் காலியான கொளத்தூர் தொகுதியையும் சேர்த்து மொத்தம் 3 சட்டமன்றத் தொகுதிகளுக்கு தேர்தல் ஆணையம் விரைவில் இடைத்தேர்தல் தேதியை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT