தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: கரையை கடந்த புயல் சின்னம்
செய்தி முன்னோட்டம்
வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் கலிங்கப்பட்டினம் அருகே கரையை கடந்துள்ள நிலையில், சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்கள் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நேற்றைய தினம் (செப்டம்பர் 23) இரவு கலிங்கப்பட்டினத்திற்கு மிக அருகில் கரையை கடந்தது. அதனால், சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மழை முன்னறிவிப்பு
மாவட்ட வாரியான மழை முன்னறிவிப்பு
இன்று, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஏனைய தமிழகப் பகுதிகள், புதுவை மற்றும் காரைக்காலில் பொதுவாக வறண்ட வானிலையே நிலவும்.
நாளை, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
செப்டம்பர் 26 முதல் 30 வரை தமிழகத்தின் ஓரிரு இடங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை தொடரக்கூடும்.