
தமிழகத்தில் இன்று நான்கு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தில் உள்ள நான்கு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடிய நிலை உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நீலகிரி, தேனி, தென்காசி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில், குறிப்பாக மலைப்பகுதிகளில், ஒருசில இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக மையம் தெரிவித்துள்ளது. வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, ஜூலை 22, இன்று, நீலகிரி, தேனி, தென்காசி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். நாளை, ஜூலை 23, தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மிதமான மழை இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் அடுத்த மூன்று நாட்களுக்கு பரவலான மழை வாய்ப்பு இருப்பதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.
சென்னை
சென்னையில் வானிலை நிலவரம்
நகரத்தில் இன்று மற்றும் நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்யலாம். நகரின் அதிகபட்ச வெப்பநிலை: 33°C ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை: 26°C - 27°C ஆகவும் இருக்குமென என தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் மேலடுக்கு சுழற்சியின் தாக்கம் காரணமாக, தமிழகத்தின் மேற்குப்பகுதிகளில் மழை அதிகரிக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மழை அதிகரிக்கக்கூடிய பகுதிகளில் பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் பயணிகள் முன்னெச்சரிக்கையாக இருக்குமாறு வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.