'42% பட்டியலினத்தவர்கள் வறுமையில் வாடுகின்றனர்': பீகார் சாதி கணக்கெடுப்பால் வெளிவந்த அதிர்ச்சி தகவல்
215 பட்டியலின சாதிகள், பழங்குடியின சாதிகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் பொருளாதார நிலையை விவரிக்கும் பீகார் அரசின் சாதி அடிப்படையிலான கணக்கெடுப்பின் இரண்டாம் பகுதி இன்று பீகார் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த புதிய அறிக்கையின் மூலம் பல முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது. அந்த தகவல்களை இப்போது பார்க்கலாம். பீகாரில் உள்ள 42% பட்டியலின சாதிகளை சேர்ந்த குடும்பங்கள் வறுமையால் வாடுகின்றனர். மேலும், பொதுப் பிரிவைச் சேர்ந்த 25% குடும்பங்கள் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளன. பழங்குடியினத்தைச் சேர்ந்த பீகார் குடும்பங்களில் 42.70 சதவீத குடும்பங்கள் ஏழைகளாக உள்ளன.
அரசு பணியில் உள்ளவர்களின் புள்ளிவிவரங்கள்
இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில்(OBC) 33.16 சதவீதம் பேரும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில்(MBC) 33.58 சதவீதம் பேரும் ஏழைகள் என்று இந்த புதிய அறிக்கை கூறுகிறது. அது போக. மற்ற சாதிகளில் 23.72 சதவீதம் பேர் ஏழைகளாக உள்ளனர். பொதுப் பிரிவைச் சேர்ந்த 6 லட்சத்துக்கும் அதிகமானோர் அரசுப் பணிகளில் உள்ளனர். இது மொத்த மக்கள் தொகையில் 3.19 சதவீதமாகும். பீகாரில் 4.99 சதவீத பூமிஹார் சாதியினரும், 3.60 சதவீத பிராமணர்களும் அரசு வேலைகளில் உள்ளனர். பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 6,21,481 பேர் அரசுப் பணிகளில் உள்ளனர், இது பீகாரில் உள்ள மொத்த பிற்படுத்தப்பட்ட மக்கள் தொகையில் 1.75 சதவீதமாகும்.
பீகார் மொத்த மக்கள் தொகையின் புள்ளிவிவரங்கள்
பீகார் அரசு வெளியிட்டிருக்கும் பொதுமக்களின் பொருளாதார நிலைகள் பெரும் கவலையை எழுப்பியுள்ளது. பீகாரில் உள்ள 34.13 சதவீத குடும்பங்கள் மாதத்திற்கு ரூ.6,000 மட்டுமே வருமானமாக பெறுகின்றன. மேலும், 29.61 சதவீதம் பேர் ரூ.10,000 அல்லது அதற்கும் குறைவான வருமானத்தில் வாழ்க்கை நடத்துகின்றனர். பீகாரில் உள்ள கிட்டத்தட்ட 28 சதவீதம் பேர் ரூ.10,000 முதல் ரூ. 50,000 வரையிலான வருமானத்தில் வாழ்கிறார்கள் என்றும், நான்கு சதவீதத்துக்கும் குறைவானவர்கள் மட்டுமே மாதம் ரூ.50,000க்கு மேல் சம்பாதிக்கிறார்கள் என்றும் பீகார் சாதி கணக்கெடுப்பு கூறுகிறது. பீகார் 80 சதவீதத்துக்கும் அதிகமானோர் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் ஆவர். அதாவது 13.1 கோடிக்கும் அதிகமான மக்கள் பிற்படுத்தப்பட்டவர்களாக இருக்கிறாரகள்.
பீகாரில் எழுத்தறிவு பெற்றவர்களின் புள்ளிவிவரங்கள்
பீகார் மாநிலத்தின் ஒட்டுமொத்த எழுத்தறிவு விகிதம் 79.7 சதவீதமாக உள்ளது. அந்த மாநிலத்தில் உள்ள 22.67 சதவீதம் பேர் மட்டுமே 5ஆம் வகுப்பு வரை படித்துள்ளனர். அதை சாதி வாரியாக பிரித்து பார்த்தால், 24.31 சதவீத பட்டியலினத்தவர்களும், 24.65 சதவீத பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களும் மட்டுமே 5ஆம் வகுப்பு வரை படித்துள்ளனர். ஆனால், பொது பிரிவில் 5ஆம் வகுப்பு வரை படித்தவர்களின் விகிதம் 17.45 சதவீதம் மட்டுமே உள்ளது. இந்த வாக்கெடுப்பில் கலந்து கொண்டவர்களில் 9 சதவீதம் பேர் மட்டுமே பள்ளி படிப்பை முடித்துள்ளனர். அது போக, பள்ளி படிப்பை முடித்த பட்டியலினத்தவர்களின் விகிதம் வெறும் 5.76 சதவீதம் மட்டுமே.
பீகார் சாதி கணக்கெடுப்பால் சூடு பிடித்திருக்கும் அரசியல்
பீகாரின் ஆகஸ்ட் கணக்கெடுப்பிற்கு பிறகு நாடு தழுவிய சாதிக் கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுப்பெற்றுள்ளன. இதற்கிடையில், சத்தீஸ்கர், தெலுங்கானா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த விவகாரம் அரசியல் களங்களில் சூடுபிடித்துள்ளது. 2024 மக்களவைத் தேர்தல் களத்தில் போட்டியிட இருப்பவர்களும் பீகார் கணக்கெடுப்பை முன்னெடுத்து பேசி வருகின்றனர். மத்திய பாஜக அரசு முன்பு, இந்த கோரிக்கையை ஆதரிக்க தயக்கம் காட்டியது. இது குறித்து பேசிய பிரதமர் மோடி, இந்த கணக்கெடுப்பு சாதி அடிப்படையில் நாட்டை பிரிக்க முயற்சிப்பதாக கூறினார். ஆனால் இந்த வாரம் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்த கணக்கெடுப்பை தனது கட்சி ஒருபோதும் எதிர்க்கவில்லை என்று கூறியுள்ளார்.