IIFA 2024: பொன்னியின் செல்வனில் நடித்ததற்கு விக்ரம், ஐஸ்வர்யா ராய்க்கு விருது
சர்வதேச இந்திய திரைப்பட விழா என்றழைக்கப்படும் IIFA விருது வழங்கும் விழா கடந்த 3 நாட்களாக அபுதாபியில் நடந்தது. தென்னிந்திய சினிமாவில் சிறந்த படைப்புகளுக்கு விருது வழங்கி கௌரவிக்கும் IIFA உட்சவ் விழாவில் தென்னிந்திய நட்சத்திரங்கள் பலரும் கலந்து கொண்டனர். தமிழ், தெலுங்கு, கன்னடா, மலையாளம் என 4 மொழிகளிலிருந்தும் பிரபல திரை நட்சத்திரங்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்த விருது விழாவில் சிறந்த தமிழ் படமாக 'ஜெயிலர்' தேர்வானது. அதேபோல மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படமும் 6 விருதுகளை வென்றது. இவ்விரு படங்களுமே SIIMA விருதுகளையும் வாரிக்குவித்தது குறிப்பிடத்தக்கது.
பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு 6 விருதுகள்
IIFA விருதுகளில் 6 பிரிவுகளில் பொன்னியின் செல்வன் திரைப்படம் விருதுகளை குவித்தது. சிறந்த நடிகருக்கான விருது விக்ரமுக்கும், சிறந்த நடிகைக்கான விருது ஐஸ்வர்யா ராய்க்கும், சிறந்த இயக்குனருக்கான விருது மணிரத்னத்திற்கும் வழங்கப்பட்டது. அதேபோல், சிறந்த பாடல் மற்றும் பின்னணி இசையமைப்பாளருக்கான விருது ஏ.ஆர்.ரஹ்மானுக்கும், சிறந்த குணச்சித்ர நடிகருக்கான விருது ஜெயராமிற்கும் வழங்கப்பட்டது. தமிழில் சிறந்த வில்லன் நடிகருக்கான விருது 'மார்க் ஆண்டனி' படத்தில் நடித்ததற்காக எஸ்.ஜே.சூர்யா பெற்றார். அதேபோல இந்திய சினிமாவின் சிறந்த பெண்மணி என்கிற சிறப்பு விருது நடிகை சமந்தாவுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது.