Loading...
இந்திய ஐடி நிறுவனங்களுக்கு அமெரிக்கா திடீர் அதிர்ச்சி! கிரீன் கார்டு சான்றிதழ் திட்டத்திலிருந்து முன்னணி IT நிறுவனங்கள் இடைநீக்கம்
PERM முறைகேடு செய்ததாக இந்திய ஐடி நிறுவனங்களை அமெரிக்க தொழிலாளர் நலத்துறை இடைநீக்கம் செய்துள்ளது

இந்திய ஐடி நிறுவனங்களுக்கு அமெரிக்கா திடீர் அதிர்ச்சி! கிரீன் கார்டு சான்றிதழ் திட்டத்திலிருந்து முன்னணி IT நிறுவனங்கள் இடைநீக்கம்

எழுதியவர் Venkatalakshmi V
Oct 08, 2026
09:15 pm

செய்தி முன்னோட்டம்

அமெரிக்காவில் வெளிநாட்டு ஊழியர்கள் நிரந்தரக் குடியுரிமை (Green Card) பெறுவதற்காக பயன்படுத்தப்படும் 'நிரந்தர தொழிலாளர் சான்றிதழ் திட்டத்தில்' (PERM) முறைகேடு செய்ததாகக் கூறி, இன்ஃபோசிஸ், டிசிஎஸ், விப்ரோ, HCL மற்றும் காக்னிசன்ட் உள்ளிட்ட முன்னணி இந்திய ஐடி நிறுவனங்களை அமெரிக்க தொழிலாளர் நலத்துறை இடைநீக்கம் செய்துள்ளது. அமெரிக்காவில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு தற்காலிக H-1B விசா வழங்கி, பின்னர் அவர்களுக்கு நிரந்தரக் குடியுரிமை பெற முதலாளிகள் விண்ணப்பிக்கும் அதிகாரப்பூர்வ அனுமதி முறையே 'PERM' ஆகும். இந்நிறுவனங்கள் இத்திட்டத்தை முறைகேடாக பயன்படுத்தியதாக தொடரப்பட்ட கூட்டாட்சி விசாரணைகளின் அடிப்படையில், இந்திய ஐடி நிறுவனங்களுடன் சேர்ந்து மைக்ரோசாப்ட், அடோப் மற்றும் கேப்ஜெமினி ஆகிய நிறுவனங்களும் இத்திட்டத்திலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளன.

சர்ச்சை

மைக்ரோசாப்ட் மற்றும் H1-B விசா சர்ச்சைகள்

மைக்ரோசாப்ட் நிறுவனம் கடந்த 2025 ஆம் ஆண்டில் தகுதியான அமெரிக்க ஊழியர்கள் கிடைக்கவில்லை எனக் கூறி 6,000-க்கும் மேற்பட்ட எச்-1பி விசாக்களையும் 3,682 PERM விண்ணப்பங்களையும் பெற்ற போதிலும், அதே ஆண்டில் 6,000 அமெரிக்க ஊழியர்களை பணிநீக்கம் செய்ததாக அமெரிக்கத் துணைத் தலைவர் ஜே.டி. வான்ஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

தகுதியான அமெரிக்கர்களுக்கு வாய்ப்பளிக்காமல், இத்திட்டம் மோசடிகளுக்கு பயன்படுத்தப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழகங்கள்

பல்கலைக்கழகங்கள் மீதான விசாரணை மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கை

ஐடி நிறுவனங்கள் மட்டுமின்றி, ஹார்வர்ட், யேல் மற்றும் ஸ்டான்ஃபோர்ட் உள்ளிட்ட ஒன்பது முன்னணி பல்கலைக்கழகங்களும் இவ்விசாரணையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.

குறைந்த ஊதியத்தில் சர்வதேச மாணவர்களை பணியமர்த்தி அமெரிக்கர்களின் ஊதியத்தை குறைத்ததாக எழுந்த புகார்களின் பேரில், தொழிலாளர் நலத்துறை ஆய்வு பொது ஆய்வாளர் சார்பில் ஏற்கனவே விசாரணை அழைப்பாணைகள் அனுப்பப்பட்டுள்ளன.

ADVERTISEMENT