
ரஷ்யாவிற்கு அழுத்தம் கொடுக்கதான் இந்தியாவிற்கு அதிக வரிகள் விதித்தாராம் டிரம்ப், கூறுகிறது வெள்ளை மாளிகை
செய்தி முன்னோட்டம்
உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யாவை மறைமுகமாக அழுத்தம் கொடுக்கவே இந்தியாவின் மீது அதிக வரிகளை விதித்தார் டொனால்ட் டிரம்ப் என்று வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் கூறினார். இந்தியாவின் வரி விகிதத்தை டிரம்ப் இரட்டிப்பாக்கி 50 சதவீதமாக உயர்த்தியுள்ளதாகவும், தற்போதுள்ள 25 சதவீத வரியுடன் கூடுதலாக 25 சதவீத வரியை சேர்த்துள்ளதாகவும் அவர் செய்தியாளர்களிடம் கூறினார். ரஷ்யாவுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்யும் நாடுகளை குறிவைத்து ரஷ்யாவிற்கு நெருக்கம் தரும் உத்தியின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கையை அவர் வடிவமைத்தார் எனவும் கூறப்பட்டுள்ளது.
அழுத்தம்
அனைத்துமே ராஜதந்திரம் என்கிறது வெள்ளை மாளிகை
"இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஜனாதிபதி மிகப்பெரிய பொது அழுத்தத்தைக் கொடுத்துள்ளார். நீங்கள் பார்த்தபடி, இந்தியா மீது தடைகள் மற்றும் பிற நடவடிக்கைகளையும் அவர் எடுத்துள்ளார்," என்று அவர் மேலும் கூறினார். மாஸ்கோ மீது "இரண்டாம் நிலை அழுத்தத்தை" பிரயோகிப்பதே தங்களின் நோக்கம் என்கிறது அமெரிக்கா. உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் வெள்ளை மாளிகையில் டிரம்ப் நடத்திய சந்திப்பிற்கு பிறகு இந்த அறிக்கை வந்துள்ளது. சந்திப்பின் இறுதியில், இரு தலைவர்களும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்துவதற்கான சாத்தியங்களை எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளனர்.
போர் நிறுத்தம்
உக்ரைனில் அமைதியை நிலைநாட்ட டிரம்ப் முயற்சி
உக்ரைன் போரை விரைவில் முடிவுக்குக் கொண்டுவர ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உறுதியாக இருப்பதாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். "ஜனாதிபதி, இந்தப் போரை விரைவில் முடிவுக்குக் கொண்டுவர விரும்புகிறார்...நேட்டோ பொதுச் செயலாளர் உட்பட அனைத்து ஐரோப்பியத் தலைவர்களும் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுய போது, இது ஒரு சிறந்த முதல் படி என்பதை அவர்கள் அனைவரும் ஒப்புக்கொண்டனர்" என்று லீவிட் கூறினார். ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை சந்தித்த 48 மணி நேரத்திற்குள், அமைதிக்கான டிரம்பின் முயற்சி ஐரோப்பிய தலைவர்களை வெள்ளை மாளிகைக்கு அழைத்து வந்ததாக லீவிட் குறிப்பிட்டார். "அவர் பதவியில் இருந்திருந்தால் இந்தப் போர் தொடங்கியிருக்காது என்று ஜனாதிபதி அடிக்கடி கூறுவார், புதின் அதை உறுதிப்படுத்தினார்," என்றும் அவர் கூறினார்.