அமெரிக்க விசா பெறுவதில் இந்தியர்களுக்குச் சிக்கல்: காத்திருப்பு நேரம் உயர்வு மற்றும் புதிய கட்டணங்கள் அறிமுகம்
செய்தி முன்னோட்டம்
அமெரிக்க விசா பெற விண்ணப்பிக்கும் இந்திய விண்ணப்பதாரர்கள் இருமடங்கு சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர். நேர்காணல் நியமனங்களுக்கான காத்திருப்பு காலம் பல மாதங்கள் அதிகரித்துள்ளதோடு, விசா பெறுவதற்கான கட்டணங்களும் கணிசமாக உயர்ந்துள்ளன. அமெரிக்க அரசின் பொறுப்புக்கூறல் அலுவலகம் செப்டம்பர் 28 அன்று வெளியிட்ட தணிக்கை அறிக்கையின்படி, 2025 நிதி ஆண்டில் இந்திய விண்ணப்பதாரர்கள் புலம் பெயரா விசா (Non-immigrant visa) நேர்காணலுக்கு சராசரியாக 346 நாட்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது கொரோனா பெருந்தொற்றுக்கு முந்தைய சராசரி காலமான 42 நாட்களை விட 8 மடங்குக்கும் அதிகமான உயர்வாகும்.
தகவல்
அதிகரித்த விண்ணப்பங்கள்
2025 நிதி ஆண்டில் இந்தியாவில் இருந்து 1.45 மில்லியன் புலம் பெயரா விசா விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.
இந்த 14.5 லட்சம் விண்ணப்பங்களை கையாள வெறும் 68 தூதரக அதிகாரிகள் மட்டுமே பணியாற்றினர்.
அதாவது, ஒரு அதிகாரியக்கு சுமார் 21,401 விண்ணப்பங்கள் என்ற மிக அதிகப்படியான பணிச்சுமை நிலவுகிறது.
B1/B2
B1/B2 சுற்றுலா மற்றும் வணிக விசாக்களுக்கான தற்போதைய நிலை
சுற்றுலா மற்றும் வணிக தேவைகளுக்காக விண்ணப்பிக்கும் B1/B2 விசா பிரிவினரே இதனால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
செப்டம்பர் மாதத் தரவுகளின்படி, இந்திய மையங்களில் அடுத்ததாகக் கிடைக்கக்கூடிய B1/B2 நேர்காணல் நேரங்கள்:
ஹைதராபாத்: சுமார் 12 மாதங்கள்
மும்பை: 11.5 மாதங்கள்
புது டெல்லி: 10 மாதங்கள்
சென்னை: 7.5 மாதங்கள்
கொல்கத்தா: 6.5 மாதங்கள்
அதேவேளையில், மாணவர் விசா (F, M, J) மற்றும் பணியாளர் விசா (H, L, O, P, Q) பிரிவுகளுக்கான நேர்காணல் காத்திருப்பு காலம் ஒப்பீட்டளவில் மிகக் குறைவாகவே உள்ளது.
கட்டண உயர்வு
விசா விண்ணப்ப கட்டண உயர்வுகளின் விபரம்
காத்திருப்பு நேரத் தாமதத்துடன் விசா கட்டணங்களும் உயர்ந்துள்ளன:
1. B1/B2, F, M, J விசாக்கள்: விண்ணப்ப கட்டணம் $185 (சுமார் ₹15,400).
2. H, L, O, P விசாக்கள்: விண்ணப்பக் கட்டணம் $205 (சுமார் ₹17,000).
3. புதிய நேர்மை கட்டணம்: 2025 குடிவரவுச் சட்டத்தின் கீழ், புலம் பெயரா விசா விண்ணப்பதாரர்களிடம் கூடுதல் கட்டணமாக $250 வசூலிக்க அமெரிக்க நாடாளுமன்றம் சட்டமியற்றியுள்ளது.
அமெரிக்காவிற்கு பயணம் செய்யத் திட்டமிடும் சுற்றுலா பயணிகள் மற்றும் தொழில்முனைவோர்கள், பயண தேதிக்கு பல மாதங்களுக்கு முன்பே விசா விண்ணப்ப நடைமுறைகளை தொடங்குமாறு அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவுறுத்தியுள்ளது.