இந்திய மருந்துகளுக்கு அமெரிக்கா கொடுத்த தளர்வு: 100% வரியிலிருந்து விலக்கு பெற்ற குறிப்பிட்ட மருந்துகள் எவை?
செய்தி முன்னோட்டம்
அமெரிக்கா சில குறிப்பிட்ட காப்புரிமை பெற்ற மருந்துகள் மற்றும் அதன் மூலப்பொருட்களுக்கு 100 சதவீத வரி விதிக்கத் திட்டமிட்டுள்ள நிலையில், இந்தியா உள்ளிட்ட 20 நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சிறப்பு மருந்துகளுக்கு பூஜ்ஜிய சதவீத வரி விதிக்கப்படும் என அமெரிக்க வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது. அரிய வகை நோய்களுக்கான மருந்துகள், கருவுறாமை சிகிச்சைகளுக்கான மருந்துகள், செல் தெரபி, ஜீன் தெரபி, ஆன்டிபாடி-டிரக் காஞ்ஜுகேட்ஸ் மற்றும் விலங்குகளுக்கான மருந்துகள் ஆகியவை இந்த 0% வரி விலக்கு பிரிவின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும், இம்மருந்துகளை தயாரிக்கப் பயன்படும் முக்கியமான மூலப்பொருட்கள் மற்றும் கூட்டமைப்புகளுக்கும் இந்த வரி விலக்கு பொருந்தும்.
பிரிவு 232
வர்த்தக ஒப்பந்தம் மற்றும் பிரிவு 232 நடவடிக்கை
அமெரிக்காவுடன் வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தங்களைக் கொண்டுள்ள அல்லது ஒப்பந்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள நாடுகளுக்கே இந்த விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியா தவிர அர்ஜென்டினா, பங்களாதேஷ், கம்போடியா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், தென்கொரியா, பிரிட்டன், வியட்நாம் உள்ளிட்ட 19 பிற நாடுகளும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
உள்நாட்டு மருந்து உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்கத்துடன், ஏப்ரல் 2-ஆம் தேதி அதிபர் டொனால்ட் டிரம்ப் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் (Section 232) 100% வரி அமல்படுத்தப்படும் சூழலில், இந்தச் சிறப்புச் சலுகை வழங்கப்பட்டுள்ளது.
ஜெனரிக் மருந்து
ஜெனரிக் மருந்துகளுக்கு விலக்கு
அதேநேரத்தில், சாதாரண ஜெனரிக் மருந்துகள் மற்றும் அவற்றின் மூலப்பொருட்களுக்கு இந்தச் பிரிவு 232-ன் கீழ் 100% வரி விதிக்கப்படாது என்றும் அமெரிக்க வர்த்தக அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.
இந்த முடிவு அமெரிக்காவிற்கு பெருமளவில் மருந்துகளை ஏற்றுமதி செய்யும் இந்திய மருந்துத் தயாரிப்பு நிறுவனங்களுக்கு பெரிய நிவாரணமாகப் பார்க்கப்படுகிறது.