ரஷ்யாவுடன் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட உக்ரைன்: அமெரிக்கா அதிபர் அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
ரஷ்யாவுடன் போர் நிறுத்த ஒப்பந்தத்தை எட்ட உக்ரைன் ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறினார்.
உக்ரைனின் இந்த முடிவை அவர் வரவேற்றதுடன், ரஷ்யாவும் அதற்கு சாதகமாக பதிலளிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
செவ்வாயன்று சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் அமெரிக்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து, ரஷ்யாவுடன் 30-நாள் போர் நிறுத்தத்தை ஏற்கத் தயாராக இருப்பதாக உக்ரைன் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனின் நேர்மறையான பதிலைத் தொடர்ந்து, அமெரிக்கா அவர்களுடன் உளவுத்துறை பகிர்வுக்கான இடைநிறுத்தத்தை நீக்கி, பாதுகாப்பு உதவியை மீண்டும் தொடங்க முடிவு செய்ததுள்ளது.
தொடர்ந்து இந்த வாரம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் பேசுவதாகக் கூறிய டிரம்ப், அதே நேரத்தில் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியை மீண்டும் வெள்ளை மாளிகைக்கு பேச்சுவார்த்தைக்கு அழைப்பதாகவும் அறிவித்தார்.
பேச்சு வார்த்தை
சுமார் 9 மணிநேரம் நீடித்த பேச்சு வார்த்தை
கடந்த மாதம் ஓவல் அலுவலகத்தில் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கிக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கும் இடையே நடந்த ஒரு மோசமான சந்திப்பிற்கு பிறகு இரு தரப்பினருக்கும் இடையிலான முதல் சந்திப்பு இதுவாகும்.
சுமார் ஒன்பது மணி நேரம் நீடித்த பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, "இந்தப் போர் நேற்று முடிவுக்கு வர வேண்டும் என்று ஜனாதிபதி விரும்பினார். எனவே, ரஷ்யர்கள் விரைவில் 'ஆம்' என்று பதிலளிப்பார்கள் என்பது எங்கள் நம்பிக்கை, இதன் மூலம் நாம் இரண்டாம் கட்டத்திற்குச் செல்ல முடியும், இது உண்மையான பேச்சுவார்த்தைகள்," என்று டிரம்பைக் குறிப்பிட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ரூபியோ செய்தியாளர்களிடம் கூறினார்.