நிஜ்ஜார் கொலையில் கனடாவிடம் ஆதாரம் கேட்கும் ஜெய்சங்கர்
காலிஸ்தானி ஆதரவாளர் நிஜ்ஜார் கொலை வழக்கில், இந்தியாவிற்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்களை வழங்குமாறு, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கனடாவை கோரியுள்ளார். நிஜ்ஜார் கொலை வழக்கில் விசாரணையை இந்தியா நிராகரிக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். இங்கிலாந்துக்கு 5 நாள் சுற்றுப்பயணமாக சென்றுள்ள ஜெய்சங்கர், அங்கு 'ஹவ் எ மில்லியன் பீப்பிள் சீ தி வேர்ல்ட்' என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். "இதுபோன்ற குற்றச்சாட்டை முன்வைக்க உங்களுக்கு ஏதேனும் காரணம் இருந்தால், தயவு செய்து ஆதாரங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்" "ஏனென்றால் நாங்கள் விசாரணையை நிராகரிக்கவில்லை" என மூத்த பத்திரிகையாளர் லியோனல் பார்பர் கேட்ட கேள்விக்கு ஜெய்சங்கர் பதிலளித்தார்.
நிஜ்ஜார் கொலை குறித்த ஆவணங்களை கனடா வழங்கவில்லை
நிஜ்ஜார் கொலையில் இந்தியாவிற்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்களை, கனடா இன்னும் வழங்கவில்லை எனவும் ஜெய்சங்கர் தெரிவித்தார். காலிஸ்தான் ஆதரவாளரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார், கடந்த ஜூன் மாதம் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் கொல்லப்பட்டதில் இந்தியாவிற்கு தொடர்பு இருப்பதற்கான நம்பத் தகுந்த ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக, கனடா அதிபர் ஜஸ்டின் ட்ரூடோ அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பேசியது, இரு நாட்டு உறவுகளில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு விரிசலை ஏற்படுத்தியது. கனடாவின் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள இந்தியா, இதை, "அபத்தமானது" என கூறி இருந்தது. இந்த விவகாரம் பூதாகரமாகவே, இரு நாடுகளும் பரஸ்பரம் அவர்கள் தூதர்களை திரும்ப பெற்றுக்கொண்டனர்.
கருத்து சுதந்திரம் பொறுப்புடன் வரவேண்டும்- ஜெய்சங்கர்
கனடாவில் அதிகரித்து வரும் காலிஸ்தான் ஆதரவு இயக்கங்களின் செயல்பாடுகளை சுட்டிக்காட்டி, பேச்சு சுதந்திரம் மற்றும் கருத்து சுதந்திரம் பொறுப்புடன் வரவேண்டும், அரசியல் நோக்கங்களுக்காக அவை தவறாகப் பயன்படுத்தப்படுவதை பொறுத்துக்கொள்வது, மிகவும் தவறானது எனக் ஜெய்சங்கர் குற்றம் சாட்டினார். இந்திய தூதர்கள் பொதுவெளியில் அச்சுறுத்தப்பட்டதற்கும், கனடாவில் இந்திய தூதரகங்கள் தாக்கப்பட்டது குறித்தும் கனடா அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காததையும் ஜெய்சங்கர் சுட்டிக்காட்டினார். மேலும் சீனா குறித்து பேசிய அவர், கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற மோதல் இரு நாட்டு உறவுகளை சீர்குலைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.