பணயக் கைதிகளை மீட்பதற்கான புதிய பேச்சுவார்த்தை- நெதன்யாகு தகவல்
காசாவில் ஹமாஸால் பிடித்து வைக்கப்பட்டுள்ள பிணைக் கைதிகளை மீட்பதற்கான புதிய பேச்சுவார்த்தைகள், கத்தார் மத்தியஸ்தத்தில் நடந்து வருவதாக, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உறுதிப்படுத்தினார். மொசாட் தலைவர் டேவிட் பர்னியா மற்றும் கத்தார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் அல் தானி ஆகியோர், ஐரோப்பாவில் சந்தித்துக் கொண்டது குறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் நெதன்யாகுவிடம் கேட்கப்பட்டது. நெதன்யாகு இந்த கேள்வியை புறக்கணித்தாலும், பேச்சு வார்த்தைகள் நடத்தும் குழுவிற்கு அறிவுரைகள் வழங்கி இருப்பதாக தெரிவித்தார். "எங்களுக்கு கத்தார் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் உள்ளன. அதைப்பற்றி சரியான நேரத்தில் நீங்கள் கேட்பீர்கள் என்று நினைக்கிறேன். இருப்பினும் பணயக் கைதிகளை முழுவதுமாக மீட்க முயற்சிக்கிறோம்" என தெரிவித்தார். பேச்சுவார்த்தைகள் தொடர்பான கூடுதல் தகவல்களை வழங்க, நெதன்யாகு மறுத்துவிட்டார்.
ஹமாஸை அழிப்பதில் இஸ்ரேல் உறுதி
இஸ்ரேலைச் சேர்ந்த 3 பணயக் கைதிகளை தவறுதலாக சுட்டுக்கொன்றதாக வெள்ளிக்கிழமை அந்நாட்டு ராணுவம் தெரிவித்ததை தொடர்ந்து, அங்கு வெடித்த போராட்டத்தின் எதிர்விளைவாக அந்நாடு இம்முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. பணயக் கைதிகளை மீட்கும் பேச்சு வார்த்தைகள் நடந்தாலும், ஹமாஸை அழிப்பதில் இஸ்ரேல் உறுதியாக உள்ளது. "நாங்கள் எங்கள் இருப்புக்கான ஒரு போரில் இருக்கிறோம், சர்வதேச அழுத்தங்கள் மற்றும் தாங்க முடியாத பொருட்செலவுகளை தாண்டி, வீழ்ந்த இந்நாட்டின் மகன்கள் மற்றும் மகள்களுக்காக வெற்றி வரை போரை தொடர வேண்டும்" என நெதன்யாகு தெரிவித்தார்.
காசாவில் குண்டு மழை பொழியும் இஸ்ரேல்
கடந்த மாத இறுதியில் கத்தார் மற்றும் எகிப்தின் மத்தியஸ்த்தின் விளைவாக கிடைத்த ஏழு நாட்கள் போர் நிறுத்தத்தில், குழந்தைகள், பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட பணயக் கைதிகள் மீட்கப்பட்டனர். இதற்கு பதிலாக, 240 பாலஸ்தீன சிறை கைதிகள், இஸ்ரேல் சிலைகளில் இருந்து விடுவிக்கப்பட்டனர். காசாவில் உள்ள 130 பணயக் கைதிகளில் குறைந்தது, 20 பேர் உயிரிழந்திருக்கலாம் என இஸ்ரேல் சந்தேகிக்கிறது. இந்நிலையில், அமெரிக்கா உள்ளிட்ட நட்பு நாடுகளின் எச்சரிக்கைகளை பொருட்படுத்தாமல், இஸ்ரேல், காசா மீது கடுமையான தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. காசாவின் கான் யூனிஸ், நாசர் மருத்துவமனைக்கு 20 உடல்களும், டஜன் கணக்கான காயமடைந்தவர்களும் நேற்று அழைத்து வரப்பட்டதாக பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.