LOADING...
மொபைல் கேம் போதையா? காசியாபாத்தில் 9-வது மாடியில் இருந்து குதித்து 3 சகோதரிகள் தற்கொலை
மூன்று சிறுமிகள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மொபைல் கேம் போதையா? காசியாபாத்தில் 9-வது மாடியில் இருந்து குதித்து 3 சகோதரிகள் தற்கொலை

எழுதியவர் Venkatalakshmi V
Feb 04, 2026
10:22 am

செய்தி முன்னோட்டம்

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தின் 'பாரத் சிட்டி' குடியிருப்பில் திங்கள்கிழமை நள்ளிரவு 16, 14 மற்றும் 12 வயதுடைய மூன்று சிறுமிகள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நள்ளிரவு சுமார் 2 மணி அளவில், வீட்டின் பால்கனியில் இருந்து மூன்று சகோதரிகளும் ஒன்றாக குதித்துள்ளனர். பலத்த காயமடைந்த அவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து வந்த போலீசார், உடல்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தியா டுடே செய்தியின் படி, சிறுமிகள் கொரியன் ஆன்லைன் விளையாட்டை விளையாடி வந்ததாகவும், அதன் ஒரு பகுதியாக, பெண்கள் பால்கனியில் இருந்து குதிக்க இரண்டு படி ஏணியை பயன்படுத்தினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணை

விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்

இந்த மூன்று சகோதரிகளும் எப்போதும் இணைந்தே இருப்பார்கள் என்றும், ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்திருக்க மாட்டார்கள் என்றும் அக்கம்பக்கத்தினர் தெரிவிக்கின்றனர். இந்தச் சிறுமிகள் ஆன்லைன் மொபைல் கேம் ஒன்றிற்கு அடிமையாகி இருந்ததாகவும், பெரும்பாலான நேரத்தை அதிலேயே செலவிட்டு வந்ததாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விளையாட்டின் தாக்கம் தற்கொலைக்குக் காரணமாக இருந்திருக்கலாமோ என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். தற்கொலைக்கான துல்லியமான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. குடும்ப உறுப்பினர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவர்களின் செல்போன்கள் ஆய்வுக்காகக் கைப்பற்றப்பட்டுள்ளன. ஆன்லைன் விளையாட்டுகளால் சிறுமிகள் தவறான முடிவுகளை எடுப்பது அதிகரித்து வருவது கவலையளிப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement