அரசியல் கட்சி நிதிப் பங்களிப்பு: இந்திய அளவில் மாநில கட்சிகளில் திமுக முதலிடம்; அதிமுக 5வது இடம்
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் உள்ள மாநில அரசியல் கட்சிகள் 2024-25 நிதியாண்டில் பெற்ற கொடைகள் பற்றிய அறிக்கையை ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ADR) வெளியிட்டுள்ளது. இந்தியத் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்ட தரவுகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட இந்த ஆய்வில், தமிழ்நாட்டின் தற்போதைய எதிர்க்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) தேசிய அளவில் ரூ.365.784 கோடி நிதியைப் பெற்று மாநிலக் கட்சிகளின் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துப் சாதனை படைத்துள்ளது. கடந்த 2023-24 நிதியாண்டில் திமுக ரூ. 21.562 கோடி மட்டுமே பெற்றிருந்த நிலையில், ஒரே ஆண்டில் ரூ. 344.222 கோடி அளவிற்கு நிதி உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அதிமுக 5வது இடம்
திரிணாமுல் காங்கிரஸ் இரண்டாம் இடம்
மாநிலக் கட்சிகளின் நிதிப் பட்டியலில் மேற்கு வங்கத்தின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ரூ. 184.96 கோடி பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து ஆந்திராவின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் (ரூ. 140 கோடி) மூன்றாம் இடத்தையும், தெலுங்கு தேசம் கட்சி (ரூ. 83 கோடி) நான்காம் இடத்தையும் பிடித்துள்ளன.
தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) ரூ. 66.30 கோடி நிதிப் பங்களிப்பைப் பெற்று தேசிய அளவில் ஐந்தாம் இடத்தைப் பிடித்துள்ளது.
டாப் 5 இடங்களைப் பிடித்த இந்த ஐந்து மாநிலக் கட்சிகள் மட்டுமே நாட்டின் மொத்த நிதியில் 79.9% பங்கைப் பெற்றுள்ளன.
வெளிப்படைத்தன்மை
நிதிப் பரிவர்த்தனை முறைகளும் வெளிப்படைத்தன்மையும்
அரசியல் கட்சிகளுக்கு வரப்பெற்ற நிதி வழங்கப்பட்ட முறைகள் குறித்து ADR அறிக்கை பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை வெளிப்படுத்தியுள்ளது.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பெற்ற நிதியில் 99 சதவீதத்திற்கும் அதிகமானவை காசோலைகள் மற்றும் ரசீதுகள் மூலம் பெறப்பட்டுள்ளன.
அதேவேளையில், திமுக பெற்ற நிதியில் 82.2% தொகையும், வங்கியின் மூலம் நேரடியாக ரூ.50.16 கோடியும் வரப்பெற்றுள்ளன.
இருப்பினும், வங்கிக் கணக்கில் ரொக்கமாக வைப்பு வைக்கப்பட்ட பல தொகைகளில் நன்கொடையாளர்களின் பெயர்கள் மற்றும் முகவரிகள் முழுமையாகக் குறிப்பிடப்படவில்லை என்றும் இந்த ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கார்ப்பரேட்
கார்ப்பரேட் நிறுவனங்களின் பெரும் பங்களிப்பு
மாநிலக் கட்சிகளின் நிதி ஆதாரங்களில் தொழில் நிறுவனங்கள் மற்றும் கார்ப்பரேட் அமைப்புகளின் ஆதிக்கமே தொடர்ந்து நீடித்து வருகிறது.
மாநிலக் கட்சிகள் தாக்கல் செய்த அறிக்கைகளின்படி, கார்ப்பரேட் நிறுவனங்கள் வழங்கிய நிதி ரூ. 872.538 கோடியாகும் (62.36%).
அதேசமயம் தனிநபர்களின் நேரடி நிதிப் பங்களிப்பு ரூ. 193.946 கோடியாக (13.86%) மட்டுமே உள்ளது.
2023-24 மற்றும் 2024-25 ஆகிய இரு நிதியாண்டுகளையும் சேர்த்து, மாநிலக் கட்சிகள் ரூ. 20,000க்கு மேல் பெறப்பட்ட 8,158 நன்கொடைகள் வாயிலாக மொத்தம் ரூ. 1,399.249 கோடி தொகையைத் தேர்தல் ஆணையத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன.