ஸ்மார்ட்போன் ஸ்கிரீன் கார்டுகளுக்கு BIS தரச்சான்று கட்டாயம்: மத்திய அரசு உத்தரவு
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ஸ்மார்ட்போன் ஸ்கிரீன் கார்டுகள் மற்றும் டெம்பர்டு கிளாஸ்களின் தரத்தை முறைப்படுத்தும் நோக்கில், மத்திய எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) புதிய BIS தரக்கட்டுப்பாட்டு உத்தரவை வெளியிட்டுள்ளது. செப்டம்பர் 21 தேதியிட்ட மத்திய அரசின் புதிய அறிவிக்கையின்படி, ஸ்மார்ட்போன் ஸ்கிரீன் கார்டுகள் பிஐஎஸ் கட்டாயப் பதிவேட்டு வரம்பிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதன்படி, ஏப்ரல் 1, 2027 முதல் இந்தியாவில் தயாரிப்பாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்கள் தங்களது ஸ்கிரீன் கார்டுகளை இந்தியத் தரநிலையான IS 19348:2025-க்கு உட்பட்டு பரிசோதித்து பதிவு செய்த பிறகே சந்தையில் விற்பனை செய்ய முடியும். நிறுவனங்கள் தயாராவதற்கு ஏதுவாக 6 மாதங்களுக்கும் அதிகமான கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
விதிமுறைகள்
புதிய விதிமுறைகள் (IS 19348:2025 Standard)
புதிய பிஐஎஸ் விதிமுறைகளின் கீழ் ஸ்கிரீன் கார்டுகளுக்கு பின்வரும் தகைமைகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன.
கண்ணாடியின் அளவு, அதன் வலிமை மற்றும் மேற்பரப்பின் தரம் சரியாக இருக்க வேண்டும்.
தெளிவான ஒளி ஊடுருவல் மற்றும் கண்ணாடியில் பார்வைக் குறைபாடுகள் இல்லாமல் இருக்க வேண்டும்.
பயன்படுத்தப்படும் ஒட்டும் பசை, கைரேகை படிவதைத் தடுக்கும் பூச்சு, ப்ளூ-லைட் பில்டர் மற்றும் பிரைவசி ஃபிலிம் ஆகியவற்றின் தரம் உறுதி செய்யப்பட வேண்டும்.
தயாரிப்பாளரின் பெயர், பேட்ச் எண் மற்றும் கார்டின் தடிமன் ஆகியவை பேக்கிங்கில் தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும்.
விலை மாற்றம்
நுகர்வோருக்கு ஏற்படும் நன்மைகள் & விலை மாற்றம்?
தற்போது இந்திய சந்தையில் தரமற்ற மற்றும் போலி டெம்பர்டு கிளாஸ்கள் அதிகளவில் மலிவு விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
புதிய விதிகளால் நுகர்வோருக்குத் தரமான மற்றும் நீடித்த ஸ்கிரீன் கார்டுகள் கிடைப்பது உறுதி செய்யப்படும்.
அரசு நேரடியாக விலையை உயர்த்தாவிட்டாலும், BIS சான்றிதழ் மற்றும் ஆய்வக பரிசோதனைகள் காரணமாக குறைந்த விலையில் கிடைக்கும் உள்ளூர் ஸ்கிரீன் கார்டுகளின் உற்பத்தியாளர்கள் கூடுதல் செலவை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதால் சிறு விலை மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.