இந்தியாவின் முதல் 'ப்ளூ பாண்ட்' செப். 28-ல் வெளியீடு: சாகர்மாலா ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
இந்தியாவின் முதன்மை கடல்சார் நிதி நிறுவனமான 'சாகர்மாலா ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன்', நாட்டின் முதலாவது 'ப்ளூ பாண்ட்' கடன்பத்திரத்தை வரும் செப்டம்பர் 28-ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியிடவுள்ளது. இப்புதிய கடன்பத்திர முயற்சி மூலம் ₹600 கோடி நிதி திரட்ட சாகர்மாலா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதில் ₹500 கோடி மதிப்பிலான கூடுதல் ஒதுக்கீட்டு உரிமையும் அடங்கும். திரட்டப்படும் நிதியானது துறைமுக மேம்பாடு, கடலோர சாலை நெட்வொர்க் திட்டங்கள் மற்றும் கடல்சார் உள்கட்டமைப்பு வளர்ச்சி பணிகளுக்காக பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நாட்டின் முன்னணி காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் தொழிலாளர் வைப்புநிதி அமைப்புகளை இதில் முதலீடு செய்ய வைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
ப்ளூ பாண்ட்
என்ன சிறப்பு இந்த 'ப்ளூ பாண்ட்'?
ப்ளூ பாண்ட் என்பது கடல்சார் வளங்களைப் பாதுகாத்தல், நிலையான மீன்பிடி முறைகள், கழிவுநீர் மேலாண்மை, கடல் ஆற்றல் மற்றும் கடல்சார் தொழில்நுட்ப திட்டங்களுக்கு நிதி திரட்டுவதற்காக அரசாங்கம் அல்லது தனியார் அமைப்புகளால் வெளியிடப்படும் சிறப்புப் பத்திரமாகும்.
இக்கடன்பத்திர வெளியீட்டை எஸ்பிஐ கேப்பிட்டல் மார்க்கெட்ஸ் (SBI Capital Markets) நிறுவனம் ஒருங்கிணைக்கிறது.
Icra மற்றும் Care ஆகிய முன்னணி கடன் மதிப்பீட்டு நிறுவனங்கள் இப் பத்திரத்திற்கு AA+ உயர்தரச் சான்றை வழங்கியுள்ளன.
சாகர்மாலா ஃபைனான்ஸ் கார்ப்பரேஷனின் மேலாண்மை இயக்குனர் எல்.வி.எஸ். சுதாகர் பாபு தெரிவித்துள்ள தகவலின்படி, இக்கடன்பத்திரங்கள் மூலம் திரட்டப்படும் தொகையானது நடப்பு நிதியாண்டிற்குள்ளேயே பல்வேறு திட்டங்களுக்கு முழுமையாக பயன்படுத்தப்படும்.