போர் இடைநிறுத்தத்திற்கு ஒகே, ஆனால் நிறுத்தத்திற்கு நோ சொன்ன இஸ்ரேல்
காசா பகுதிக்கு நிவாரண உதவிகள் செல்வதற்காகவும், அங்குள்ள பாதிக்கப்பட்ட மக்கள் வெளியேறுவதற்காகவும், போரில் தினசரி 4 மணி நேரம் இடைநிறுத்தம் செய்ய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தனியாகு ஒப்புதல் அளித்துள்ளார். போர் நிறுத்தத்தை திட்டவட்டமாக மறுத்துள்ள அவர், போர் நிறுத்தம் ஹமாஸ் இடம் சரணடைவதற்கு சமமானது என தெரிவித்துள்ளார். மேலும் காசா பகுதியில் இஸ்ரேல் படைகள் சிறப்பாக செயல்பட்டு வருவதாக நெத்தனியாகு கூறினார். இஸ்ரேலின் இம்முடிவை வரவேற்றுள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன், போர் நிறுத்தத்திற்கு சாத்தியம் இல்லை என்பதையும் தெரிவித்துள்ளார். போரில் இடைநிறுத்தம் செய்ய இஸ்ரேல் சம்மதித்த போதும், இடைநிறுத்தம் எப்போது செய்யப்படும் என்ற தகவல்களை வெளியிடவில்லை.
காசாவை ஆளும் எண்ணம் இல்லை- நெத்தனியாகு
கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஏபிசி தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த இஸ்ரேல் பிரதமர் நெத்தனியாகு, போர் முடிந்த பின்னர் காசாவின் ஒட்டுமொத்த பாதுகாப்பிற்கு, காலவரையற்ற காலத்திற்கு இஸ்ரேலுக்கு பொறுப்பு இருப்பதாக தெரிவித்தார். இதற்கு கடும் கண்டனங்களை பதிவு செய்த அமெரிக்கா, இது இஸ்ரேலுக்கும், காசாவிற்கும் நல்லதல்ல என தெரிவித்திருந்தது. தற்போது அமெரிக்காவின் ஃபாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், காசாவை ஆளும் எண்ணம் இல்லை எனக் கூறி இச்சர்ச்சைக்கு நெத்தனியாகு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். மேலும், "நாங்கள் காசாவை ஆக்கிரமிக்க முற்படவில்லை, ஆனால் காசாவிற்கும் எங்களுக்கும் சிறந்த எதிர்காலத்தை வழங்க நாங்கள் முயல்கிறோம்" எனக் கூறியுள்ளார்.
பாலஸ்தீனியர்களுக்கு உதவ முன்வந்த துருக்கி
அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கனிடம், காசாவிற்குள் செல்லும் உதவிகளை 500 லாரிகளாக அதிகரிக்க துருக்கி கோரியுள்ளது. இதற்கு பிளிங்கன் நேர்மறையாக பதில் அளித்ததாக, ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம், துருக்கி அதிபர் தையிப் எர்டோகன் தெரிவித்துள்ளார். பிற நாடுகளுடன் இணைந்து பாலஸ்தீனுக்கு, அவசர ஊர்திகள், உணவு, குடிநீர், மருந்துகள் உள்ளிட்டவற்றை அனுப்புவதாக அதிபர் எர்டோகன் தெரிவித்துள்ளார். மேலும் அவர்,காயமடைந்த பாலஸ்தீனியர்கள் மற்றும் நீண்டகால நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை, துருக்கி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற அனுமதிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.