LOADING...
ஜி7 மாநாடு சுவாரசியங்கள்: மோடி-மெலோனி 'இன்ஸ்டாகிராம்' மொமெண்ட் முதல் உலகத்தலைவர்களின் பேச்சுகள் வரை
தலைவர்களின் மறுபக்கத்தை இந்த உரையாடல்கள் வெளிப்படுத்தியுள்ளன

ஜி7 மாநாடு சுவாரசியங்கள்: மோடி-மெலோனி 'இன்ஸ்டாகிராம்' மொமெண்ட் முதல் உலகத்தலைவர்களின் பேச்சுகள் வரை

எழுதியவர் Venkatalakshmi V
Jun 17, 2026
07:20 am

செய்தி முன்னோட்டம்

சர்வதேச மோதல்கள், உலகப் பொருளாதாரம் போன்ற மிகத் தீவிரமான விவாதங்களுக்கு மத்தியில், பிரான்சில் நடைபெறும் ஜி7 (G7) உச்சி மாநாட்டில் உலகத் தலைவர்கள் தங்களுக்குள் சிகரெட், கால்பந்து மற்றும் பிறந்தநாள் பரிசுகள் குறித்து ஜாலியாகப் பேசிக்கொண்ட சுவாரசியமான தகவல்கள் ரகசிய மைக்ரோஃபோன்கள் மூலமாகப் பொதுவெளியில் கசிந்துள்ளன. அதிகாரப்பூர்வ சந்திப்புகளுக்கு நடுவே, கேமராக்களுக்கு பின்னால் இருக்கும் தலைவர்களின் மறுபக்கத்தை இந்த உரையாடல்கள் வெளிப்படுத்தியுள்ளன.

மோடி - மெலோனி

"நாமதான் இன்ஸ்டாகிராமில் ரொம்ப ஃபேமஸ்": மோடி - மெலோனி வைரல் பேச்சு

சமூக வலைத்தளங்களில் எப்போதும் வைரலாகும் இத்தாலிய பிரதமர் ஜார்ஜியா மெலோனி மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரின் 'Melodi' கூட்டணி இந்த மாநாட்டிலும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. க்ரூப் புகைப்படம் எடுப்பதற்கு முன்னதாகப் பிரதமரைச் சந்தித்த மெலோனி, "உங்களை மீண்டும் சந்தித்ததில் மகிழ்ச்சி!" என்று கூறினார். அப்போது பிரதமர் மோடி இன்ஸ்டாகிராம் பற்றிப் பேச, உடனடியாக புன்னகைத்த மெலோனி, "ஆமாம், இன்ஸ்டாகிராமில் நாம்தான் மிகவும் பிரபலமானவர்கள்!" என்று தங்களுக்குள் விளையாட்டாகப் பேசியது மைக்கில் பதிவாகி விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

டிரம்ப்

மேக்ரானின் காணாமல் போன கடிகாரமும் டிரம்பின் குறும்புப் பதிலும்

தலைவர்கள் மதிய உணவிற்கு தயாராகிக் கொண்டிருந்த போது, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தனது கைக்கடிகாரத்தை மறந்து மேஜையிலேயே விட்டுச் சென்றதை கனடா பிரதமர் மார்க் கார்னி கவனித்தார். "அவர் கடிகாரத்தை இங்கேயே விட்டுச் சென்றுவிட்டார், அது நம்மிடம் உள்ளது" என்று மார்க் கார்னி கிண்டலாகக் கூற, உடனே அருகில் இருந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், "அவர் சென்றுவிட்டால் அதை என்னிடம் கொடுத்துவிடுங்கள், என்னிடம் கொடுங்கள்" என்று கூறி அங்கிருந்தோரைச் சிரிக்க வைத்துள்ளார்.

Advertisement

பரிசுகள்

சவால், கால்பந்து மற்றும் பரிசுகள்

மே 1 முதல் தான் சிகரெட் பிடிப்பதைக் கைவிட்டுவிட்டதாக மெலோனி கூறியதும், பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மர் உள்ளிட்ட பல தலைவர்கள் அவருக்குக் கைதட்டிப் பாராட்டினர். மேலும், அடுத்த ஆண்டு பிரான்சில் நடக்கும் சைக்கிள் ஓட்டுதல் உலக சாம்பியன்ஷிப் போட்டியை முன்னிட்டு மேக்ரான் அனைவருக்கும் சைக்கிள்களைப் பரிசளித்தார். உடற்பயிற்சியை வெறுக்கும் டிரம்பிற்கு இது வியப்பை ஏற்படுத்திய நிலையில், ஜெர்மனி அதிபர் பிரீட்ரிக் மெர்ஸ் டிரம்பிற்கு 47ஆம் எண் கொண்ட ஜெர்மனி கால்பந்து ஜெர்சியைப் பரிசளித்து, "நாமெல்லாம் ஒரே அணிதான்" என்று நட்பு பாராட்டினார்.

Advertisement